Published : 16 Apr 2019 02:12 PM
Last Updated : 16 Apr 2019 02:12 PM
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டுவந்த 'நியூயார்க் டைம்ஸ்', 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' ஆகிய பத்திரிகைகளுக்கு இந்த ஆண்டு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
'நியூயார்க் டைம்ஸ்', 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' ஆகிய இரு பத்திரிகைகளும் வெவ்வேறு புலனாய்வுகளை மேற்கொண்டு ட்ரம்ப் மற்றும் ட்ரம்ப் குடும்பத்தினரைப் பற்றிய சில உண்மைத் தகவல்களை வெளிக்கொணர்ந்தன.
'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை தனது புலனாய்வு மூலம், தன்னிடம் உள்ள சொத்துகள் அனைத்தும் தானே சம்பாதித்தது என்ற ட்ரம்ப்பின் கூற்று பொய் என நிரூபித்ததற்காகவும் அவரது மாபெரும் வணிக சாம்ராஜ்யம் மிகப்பெரிய அளவில் வரிஏய்ப்புக்கான சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்தி வந்ததை நிரூபித்ததற்காகவும் மதிப்புவாய்ந்த பத்திரிகை விருது வழங்கப்படுவதாக நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் புலிட்சர் விருதுக்குழு அறிவித்துள்ளது.
மேலும், 2016-ல் அதிபர் தேர்தல் பிரச்சார காலகட்டத்தில் இரு பெண்களுடன் ட்ரம்ப் நெருக்கமாக இருந்ததாக கூறப்படும் சம்பவத்தில் அதுகுறித்த ரகசியங்களை வெளியிடாமல் இருக்கவும் அதைப்பற்றி பேசாமல் இருப்பதற்காகவும் அவ்விரு பெண்களுக்கு பணம் வழங்கப்பட்ட ரகசியத்தை 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' வெளியிட்டது. புலனாய்வு மூலம் இத்தகவலை வெளியிட்டமைக்காக வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கும் இந்த ஆண்டு புலிட்சர் விருது வழங்கப்படுகிறது. .
கடந்த 2018-ல் பிப்ரவரி மாதத்தில் மார்ஜோரி ஸ்டாங்மேன் டாக்லாஸ் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இதை முன்கூட்டியே தடுக்கத் தவறிய மாகாணத்தின் சட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகம் ஆகியவற்றின் மெத்தனப் போக்குகளை மிகச்சரியாக வெளியுலகுக்கு எடுத்துக்காட்டிய 'தி சவுத் ஃப்ளேரிடா சன் சென்டினல்' பத்திரிகைக்கும் இந்த ஆண்டு புலிட்சர் விருது வழங்கப்படுவதாக விழாவில் அறிவிக்கப்பட்டது.
இவ்விழாவில் பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க் நகரில் சர்ச்சில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் இறந்ததை வெளிக்கொண்டுவந்த 'பிட்ஸ்பர்க் போஸ்ட்' இதழுக்கும் யேமனில் நடைபெற்றுவரும் போர் அவலங்களை உலகத்திற்கு வெளிக்கொணர்ந்த 'தி அசோஸியேடட் பிரஸ்' இதழுக்கும் மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுவந்த அட்டூழியங்களை வெளிக்கொணர்ந்த 'ராய்ட்டர்ஸ்'க்கும் புலிட்சர் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT