Published : 10 Mar 2019 06:51 AM
Last Updated : 10 Mar 2019 06:51 AM

பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி

பாலகோட்டில் இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தவே இல்லை..

இந்தியாவின் இரண்டு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி விட்டோம்.. விமானியை கைதியாகப் பிடித்துவிட்டோம்.. எப்-16 விமானத்தை நாங்கள் பயன்படுத்தவே இல்லை…பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் புகுந்த இந்திய நீர் மூழ்கிக் கப்பலை விரட்டியடித்து விட்டோம்… இப்படி பாகிஸ்தான் தொடர்ந்து அறிக்கை விட்டுக் கொண்டே இருக்கிறது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர், ஜெய்ஷ் தீவிரவாத அமைப்பின் தலைவன் பாகிஸ்தானில் இருப்பதாகவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியிருக்கிறார்.

இறுதியாக, பாகிஸ்தான் ராணுவமும் ஐஎஸ்ஐ உளவு அமைப்பும் ஜெய்ஷ் தீவிரவாத அமைப்பை பயன்படுத்தி இந்தியாவில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நடத்தியதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியிருக்கிறார்.

கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் இருந்து வரும் முரண்பட்ட தகவல்களால் உலக நாடுகள் சிரிப்பாய் சிரிக்கின்றன. புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து உருவான பிரச்சினையில் இருந்து மீண்டு வெளிவர இம்ரானும் பாகிஸ்தான் ராணுவமும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

தீவிரவாத அமைப்புகளுக்கு புகலிடம் கொடுத்து வருவதோடு, இந்திய துணை கண்டத்தில் அமைதியைக் கெடுத்து வரும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததால் பாகிஸ்தானை பல நாடுகள் கண்டித்து வருகின்றன. சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து ஹபீஸ் சய்யீதின் பெயரை நீக்க ஐக்கிய நாடுகள் சபை மறுத்திருப்பது இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசுக்கு பலத்த அடியாக மாறியுள்ளது.

ஜெய்ஷ் தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானில் செயல்படவில்லை என ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் சொல்கிறார்.

ஆனால், அதேநேரம் அந்த அமைப்பு பாகிஸ்தானில் இருந்து ஆடியோ வெளியிடுகிறது. ஜெய்ஷ் அமைப்பின் தலைவர் மசூத் அசார் உயிரோடுதான் இருக்கிறார் என்கிறது அந்த ஆடியோ. அதைவிட, இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது எங்கள் அமைப்புதான் என தாக்குதலுக்கு பொறுப்பேற்கிறது ஜெய்ஷ் அமைப்பு.

அசாரின் சகோதரரையும் மகனையும் தடுப்புக் காவலில் கைது செய்துள்ளோம் என பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகம் சொன்ன பிறகு, அந்த அமைப்பே எங்கள் நாட்டில் இல்லை என பாகிஸ்தான் ராணுவம் சொல்கிறது. இதனால் பாகிஸ்தான் உலக நாடுகளின் கேலிப் பொருளாகி விட்டது.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள கெட்ட பெயரை நீக்குவதற்கு இம்ரான் அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஒருபுறம் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகவும் மறுபுறம் உலக நாடுகளை நம்பவைப்பதற்காக தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது போலவும் நாடகமாடி வருகிறது.

ஆனால் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

பாரீஸில் உள்ள நிதி நடவடிக்கை பணிக் குழு (எப்ஏடிஎப்) பாகிஸ்தான் நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

இதே நிலை நீடித்தால், பாகிஸ்தான் நிதிச் சிக்கலில் மாட்டிக் கொள்ளும். சர்வதேச நிதியம் உள்ளிட்ட எந்த நிதி அமைப்புகளிடம் இருந்தும் கடன் வாங்க முடியாது. அதோடு, பொருளாதார தடைகளும் விதிக்கப்படும். சிலபல நடவடிக்கைகளை பாகிஸ்தான் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வரும் ஜூனில் இது குறித்து இந்த அமைப்பு ஆய்வு செய்யும். செப்டம்பர் அல்லது அக்டோபரில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

கடைசி நேரத்தில் சீனா தலையிட்டு தனது பலத்தை பயன்படுத்தி பாகிஸ்தானை காப்பாற்றி விடும் என இந்த முறை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இந்த முறை விவகாரம் மிகவும் சிக்கலானது. அதோடு இந்தியாவுக்கு பல நாடுகள் ஆதரவைத் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் ஆதரவு இனி தனக்கு கிடைக்காது என்பதை பாகிஸ்தான் உணர்ந்துள்ளது. அதோடு, தீர்க்க முடியாத காஷ்மீர் பிரச்சினைதான் தீவிரவாதத்துக்கு காரணம் என பாகிஸ்தான் சொல்வதை ஏற்க யாரும் தயாராக இல்லை என்பதையும் அது தெரிந்து கொண்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாகவே அமெரிக்கா பணம் கொடுத்தும் மிரட்டியும் தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தானை வலியுறுத்தி வந்தது. ஆனால், அமெரிக்காவுக்கு உதவுவது போல் நடித்து, தானே தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டதாக பாகிஸ்தான் பாசாங்கு காட்டியது. பல வழிகளிலும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் இனியும் இப்படித்தான் இருக்குமா அல்லது தனது நிலையை மாற்றிக் கொள்ளுமா என்பது போகப்போகத்தான் தெரியும்.

டாக்டர் ட்ரிதர் கிருஷ்ணசுவாமி

எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் பேராசிரியர்.

வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x