Last Updated : 07 Mar, 2019 05:47 PM

 

Published : 07 Mar 2019 05:47 PM
Last Updated : 07 Mar 2019 05:47 PM

இந்தோனேசிய தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு: 10 நாட்களாக நடந்த தேடும் படலம் முடிந்தது; சிக்கிய 27 பேர் உடல்கள் மீட்பு

இந்தோனேசியாவின் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் உடல்களைத் தேடும் படலம் முடிவுக்கு வந்ததாக தேசிய பேரழிவு மீட்புப் பணிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக நடைபெற்ற தேடும் படலத்தில் இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் மேலும் பல உடல்கள் புதையுண்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஜகார்தாவிலிருந்து வெகுதொலைவில் உள்ள வடக்கு சுலாவெஸியில் பூலாங் மங்கொண்டா மாவட்டத்தில் இந்த தங்கச் சுரங்கம் அரசின் அனுமதியின்றி நடைபெற்று வருகிறது. இதில்  பிப்ரவரி 26 அன்று தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டபோது அதனுள்ளே 100 பேர் இருந்தனர்.

தேசிய தேடல் மற்றும் மீட்புப் பணிகளின் இயக்குநர் புடி புர்னாமா தெரிவித்ததாவது:

''கடைசி மூன்று மணிநேரம் பாறைகள் இடிந்து விழுந்து கொண்டிருந்ததைத் தொடர்ந்து தேடல் பணி நிறுத்தப்பட்டது. இந்தோனேசிய தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்ளை மீட்கும் பணி இன்று நிறைவடைகிறது. இதில் சிதையாத உடல்கள், பகுதி உடல் பாகங்கள் என இதுவரை 27 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இச்சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவினால் அதன் செங்குத்தான நிலப்பரப்புக்குள் 20 பேரை உயிருடன் இழுத்துக் கொண்டது. இச்சரிவின் காரணமாக இருவர் பின்னர் உயிரிழந்தனர். ஒருவரின் கால்களை வெட்டிய பிறகு அவரை மீட்க முடிந்தது.

சுரங்கப் பகுதி இடிபாடுகளிலிருந்து விழுந்த பாறைகளும் துகள்களும் குகை வழியை மூடிக்கொள்ள அதை நீக்கிக்கொண்டுதான் நாங்கள் வெளியே வந்தோம்.

இனியும் இப்பணியைத் தொடரமுடியாத அளவுக்கு இடிபாடுகள் அதிகமாகத் தொடங்கியுள்ளன.

200க்கும் அதிகமான மீட்புப் பணியாளர்கள் தேடல் பணியின் ஆரம்பக் கட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். உயிர் பிழைத்தவர்கள் கயிறுகளையும் மற்ற உபகரணங்களையும் கொண்டு மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் இதுவரை 21 பேர் அடையாளம் காணப்பட்டனர். இன்னும் இருவரை அடையாளம் காணும் பணியில் தடய அறிவியல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்''.

இவ்வாறு புடி புர்னாமா தெரிவித்தார்.

உள்ளாட்சித்துறை அடையாளம் தெரியாத ஓர் உடலையும் எஞ்சிய ஐந்து சிதறிய உடல் பாகங்களையும் மிகப்பெரிய கல்லறையில் புதைக்கும் பணியை மேற்கொண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x