Published : 10 Mar 2019 04:16 PM
Last Updated : 10 Mar 2019 04:16 PM
கொலம்பியாவின் மத்திய கிழக்குப் பகுதியில் வானில் பறந்துகொண்டிருந்த தனியார் விமானம் ஒன்று சமவெளிப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் நகர மேயர் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (சனிக்கிழமை) நடந்த இவ்விமான விபத்துகுறித்து ஏஎப்பி தெரிவித்துள்ள விவரம் வருமாறு:
லாசர் ஏரியோவுக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று நேற்று காலை 10.40க்கு ''ஆபத்து காப்பாற்றுங்கள்'' என்று எமர்ஜென்ஸி அழைப்பைவிடுத்து கொலம்பியாவின் மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள சமவெளி ஒன்றில் விழுந்து நொறுங்கியது.
இதில் நகர மேயர் ஒருவரது குடும்பம் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்ததாகவும் விமானத்தில் சென்றவர்களில் ஒருவர்கூட உயிர் பிழைக்கவில்லை என்றும் அந்நாட்டின் சிவில் ஏரோனாட்டிக்ஸ் சிறப்பு நிர்வாக பிரிவு ஏஎப்பியிடம் தெரிவித்தது.
இவ்விமானம் தெற்கு நகரமான சான் ஜோஸ் டெல் காவியேரேவிலிருந்து மத்திய வில்லாவிவிசெசியோவுக்கு பறந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென ''ஆபத்து காப்பாற்றுங்கள்'' என்ற துயர அழைப்பை விடுத்து விமானப் போக்குவரத்துத் துறையின் எமர்ஜென்ஸி சேவைப் பிரிவுக்கு தகவல் தெரிவித்தது. எனினும் அடுத்த சில சிமிடங்களில் தன்னுடைய சோக முடிவை அவ்விமானம் எதிர்கொண்டது.
இதுகுறித்து ஆசிஎன் தொலைக்காட்சி தெரிவிக்கையில், ''அத்தருணத்தில் விமானம் சான் மார்டின் நகரத்தின்மீது பறந்துகொண்டிருந்தது. அப்போது விமானி என்ஜினை மாற்றி தரையில் இறக்குவதற்கு முயன்றுள்ளார். ஆனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போதிருந்த வானிலையும் விமானத்திற்கு சாதகமாக அமையவில்லை'' என்று தெரிவித்துள்ளது.
இவ்விமானத்தில் உயிரிழந்த 14 பேரில் லுப்ஸ் மாகாணத்திற்குட்பட்ட டரைரா நகரசபை மேயர் டோரிஸ் வில்லேகாஸ் மற்றும் அவரது கணவர் மற்றும் மகள், இவர்கள் தவிர விமானத்தில் பயணித்த அவ் விமானத்தின் உரிமையாளர், விமானத்தை ஓட்டிச் சென்ற ஜெய்ம் காரில்லோ, இணை விமான ஜெயிம் ஹெர்ரெரா மற்றும் விமான தொழில்நுட்ப நிபுணர் அலெக்ஸ் மேரேனோ ஆகியோர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
டக்ளஸ் டிசி-3 என்ற இந்த விமானம், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இரட்டை என்ஜின் விமானம் ஆகும். இது முதலில் 1930களில் தயாரிக்கப்பட்டது.
இக் கோர சம்பவம் குறித்து கொலம்பிய அதிபர் இவான் ட்யூக் ட்விட்டரில் பதிவிட்டுள்ள தனது அஞ்சலிக் குறிப்பில், ''ஆழ்ந்த இரங்கல்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
விமான விபத்தில் எவரும் உயிர்பிழைக்கவில்லை என்ற செய்தி கொலம்பிய மக்களுக்கு சோகத்தை அளித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT