Last Updated : 05 Mar, 2019 11:25 AM

 

Published : 05 Mar 2019 11:25 AM
Last Updated : 05 Mar 2019 11:25 AM

2020 அதிபர் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்: ஹிலாரி கிளிண்டன் அறிவிப்பு

2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்று முன்னாள் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார்.

1947-ஆம் ஆண்டு பிறந்த ஹிலாரி கிளிண்டன், அமெரிக்க அரசியலில் பிரபலமானவர்.  ஐக்கிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அமெரிக்க செனட் சபை உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார்.

அமெரிக்க வரலாற்றில், ஒரு பெரிய அரசியல் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வான முதல் பெண்மணி இவரே. கடந்த 2016-ம் ஆண்டு குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட்டார். தேர்தல் கணிப்புகள் ஹிலாரியின் பக்கம் இருந்தாலும் முடிவுகள் அவருக்கு எதிராக இருந்தன.

தேர்தலில் தோற்றாலும் தொடர்ந்து மக்களுக்காக உழைப்பேன் என்று அறிவித்தார் ஹிலாரி. அடுத்த ஆண்டு தேர்தலுக்காக அமெரிக்கா தயாராகி வரும் நிலையில் அமெரிக்க ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த ஹிலாரி, ''நான் எதை நம்புகிறேனோ அதற்காகத் தொடர்ந்து பணியாற்றுவேன். அதுகுறித்துப் பேசுவேன்.

நாட்டில் (அமெரிக்காவில்) இப்போது நடக்கும் சம்பவங்கள் என்னை மிகுந்த சங்கடத்துக்கு ஆளாக்குகின்றன. 2020 அதிபர் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. ஆனால் அதற்காக எங்கும் போய்விட மாட்டேன்.

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர்களாகப் போட்டியிட எண்ணுபவர்களிடம் பேசி வருகிறேன். ட்ரம்ப் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் நிறைவேற்றாத வாக்குறுதிகளின் பட்டியலே நீளமாக இருக்கிறது. அதுகுறித்துப் பேசுங்கள் என்று கூறியுள்ளேன்'' என ஹிலாரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x