Published : 27 Feb 2019 04:35 PM
Last Updated : 27 Feb 2019 04:35 PM

2015 மகா பூகம்பத்தின் தாக்கம்: நேபாளத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு  இரட்டைப் பின் அதிர்வுகள்- அச்சத்தில் மக்கள்

2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நேபாளத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தினால் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாக, சுமார் 22,000 காயமடைந்தனர். அந்த பூகம்பத்தில் கூர்க்கா மற்றும் நுவாகோட் பகுதிகள் மீள முடியாமல் கடும் சேதங்களைச் சந்தித்தன.

 

ஆனால், இன்று 4 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பயங்கர பூகம்பத்தின் விளைவாக 5 நிமிட இடைவெளியில் இரட்டை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

 

முதல் நிலநடுக்கம் அந்நாட்டு நேரம் மாலை 4.20 மணியளவில் காத்மாண்டுவுக்கு 150 கிமீ-க்கு கிழக்கே டோலக்கா மாவட்டத்தில் ஏற்பட்டது, ரிக்டர் அளவில் இது 4.4 என்று பதிவானது. இதனையடுத்து 5 நிமிடங்கள் இடைவெளியில் காத்மாண்டுவுக்கு 100 கிமீ தொலைவில் உள்ள சிந்துபால்சவுக்கில் மையம் கொண்டு 2வது நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

இந்த அடுத்தடுத்த இரண்டு நிலநடுக்கங்களும் 2015-ல் ஏற்பட்ட மகா பூகம்பத்தின் பின் அதிர்வுகளே என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இரண்டு நிலநடுக்கங்களாலும் இதுவரை அழிவு தகவல்களோ உயிரிழப்பு தகவல்களோ இல்லை.

 

நிலவியல் ரீதியாக இக்கட்டான இடத்தில் அமைந்துள்ள நேபாள்:

 

நிலவியல் ரீதியாக பலவீனமான ஒரு இடத்தில் நேபாள் அமைந்துள்ளது. இந்தியக் கண்டத்தட்டு (டெக்டானிக் பிளேட்), யூரேசியன் கண்டத்தட்டுக்கு அடியில் செல்லும் பகுதியில் அமைந்துள்ளது நேபாளம். இந்த நகர்வுகளினால் அழுத்தம் ஏற்பட்டு அது தன் ஆற்றலை அவ்வப்போது வெளியிடும்போது பூகம்பங்கள் ஏற்படுகின்றன.

 

இந்த பூகம்பங்களினால் நேபாளம் தன் நிலப்பகுதிகள் பலவற்றை ஏற்கெனவே இழந்து வந்துள்ளது. இந்நிலையில்தன 2015 ஏப்ரலில் நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம் பல உயிர்களை பறித்ததொடு ஏராளமான கட்டிடங்கள் பூமிக்குள் புதைந்தன.

 

ஆனால் இது எதிர்நோக்கப்படும் ‘மகா இமாலய பூகம்பம்’ அல்ல என்று நிபுணர்கள் அப்போது கூறினர்.

 

இதற்கிடையே செப்டம்பர் 30, 2018-ல் வெளியான ஆய்வறிக்கையில், மத்திய இமாலயத்தில் 8.5 ரிக்டர் அளவில் மகா பூகம்பம் வெடிக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன் படுமோசமான தாக்கம் இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியபகுதிகளில் கடுமையாக இருக்கும் என்றும் தலைநகர் டெல்லியிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது.

 

மத்திய இமாலயப் பகுதியில் அழுத்தம் அதிகரித்து கொண்டே வருவதால் நேபாளம் ஒவ்வொரு ஆண்டும் 18 மிமீ கீழே அழுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனால்தன இப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

 

இந்நிலையில் 2018ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு மையத்தின் பூகம்ப ஆய்வு நிபுணர்கள் 2018ம் ஆண்டு நடத்திய ஆய்வில் தெரிவிக்கும் போது 1315 மற்றும் 1440ம் ஆண்டுகளில் மத்திய இமாலயப் பகுதியில் ஏற்பட்ட மிகப்பயங்கரமான நிலநடுக்கத்தினால் சுமார் 600கிமீ தொலைவு நீளத்துக்கு நிலப்பகுதியில் பிளவு ஏற்பட்டது.  அதன் பிறகு 699-700 ஆண்டுகளுக்கு இப்பகுதியில் பெரிய அளவில் அழுத்தம் அதிகரித்து வருகிறது என்றும் இதனால் 8.5 ரிக்டர் அளவில் ஒரு பெரிய பூகம்பம் பெரும் நாசத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்தப் பின்னணியில்தான் 2015 நேபாள் பூகம்பத்தின் விளைவாக 4 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இரட்டைப் பின்னதிர்வு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x