Published : 22 Feb 2019 09:20 AM
Last Updated : 22 Feb 2019 09:20 AM
இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் நகரில் இந்தியாவின் உதவியுடன் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடமாகாண மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வாழ்வாதாரத்தை உயர்த்தவும், உற்பத்தியை அதிகரிப்பதற்கும், வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் இந்தியாவிலுள்ள தனியார் துறையினர் தொழிற்சாலைகளை உருவாக்கி அதிக அளவு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதனால் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணத்தின் முதலாவது தொழில்நுட்பப் பூங்காவைஉருவாக்குவதற்கு இந்தியாவுக்கு கடந்த ஆண்டு இலங்கையின் வடமாகாண சபை வேண்டுகோள் விடுத்தது. இதனை ஏற்றுயாழ்ப்பாணத்தில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் இலங்கை பிரதமர்ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் இலங்கைக்கான இந்தியத் தூதர் தரண்ஜித் சிங் சாந்து மற்றும் இலங்கைக்கான சர்வதேச வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர் கொடிகாரா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இலங்கைக்கான சர்வதேச வர்த்தக அமைச்சர் மாலிக் சமரவிக்கிரம, நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உள்நாட்டு யுத்தத்துக்குப் பிறகு இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலன்சார் முன்னேற்றத் திட்டங்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் உதவிகளின் வரிசையில் இத்திட்டமும் ஒன்றாகும். இந்த தகவல் தொழில்நுட்பப் பூங்காவால் வடமாகாணத்தில் தகவல் தொடர்பு மற்றும் தொழில்சார் சேவைகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கவும் மேம்படுத்தவும் உதவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT