Published : 20 Jan 2019 08:02 AM
Last Updated : 20 Jan 2019 08:02 AM

அதிபர் ட்ரம்பும்.. அமெரிக்க சுவரும்..

யார் எக்கேடு கெட்டுப் போனால் என்ன… தான் நினைத்தபடி மெக்ஸிகோ எல்லையில் 2 ஆயிரம் மைல் சுற்றளவுக்கு தடுப்புச் சுவர் எழுப்பியே தீருவது என்ற பிடிவாதத்தோடு இருக்கிறார் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப். அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் அகதிகளை தடுப்பதுதான் அவர் நோக்கம். இதற்காக, கான்கிரீட் சுவர் இல்லாவிட்டாலும் கம்பி வேலியாவது அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அவருடைய இந்த பிடிவாதத்தால், கடந்த 4 வாரங்களாக அமெரிக்கா முடங்கிப் போய் கிடக்கிறது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை விற்று நாட்களை கழிக்கிறார்கள். ஆனாலும் தன் நிலையில் பிடிவாதமாக இருக்கிறார் ட்ரம்ப்.

அமெரிக்க வரலாற்றில் இதுவரையில் இத்தனை நாட்கள் அரசு முடங்கியதில்லை. எப்போது நிலைமை சீராகும் என்றும் தெரியவில்லை. 2016 அதிபர் தேர்தலில் அமெரிக்க எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவேன் என்றும் அதற்காகும் செலவை மெக்ஸிகோ தர வேண்டியது இருக்கும் என்றும் வாக்குறுதி கொடுத்திருந்தார். அதை நிறைவேற்றத்தான் இந்த பிடிவாதம். இப்போது, தடுப்புச் சுவருக்கான செலவை மெக்ஸிகோ  கொடுக்க வேண்டும் என நான் சொல்லவே இல்லை என்கிறார். 570 கோடி டாலர் அமெரிக்க அரசு கொடுக்க வேண்டும் என்கிறார். இதை அவரது குடியரசுக் கட்சியினரும் ஏற்கவில்லை, ஜனநாயகக் கட்சியினரும் ஏற்கவில்லை. பெரும்பாலான எம்.பி.க்கள் இதெல்லாம் வெட்டிவேலை என்கின்றனர். இதற்கு ஒரு முடிவே தெரியாமல் நிலைமை மோசமாக போய்க் கொண்டிருக்கிறது. 'அரசு முடக்கத்தை நீக்குங்கள்.. பிரச்சினையை பேசித் தீர்ப்போம்..’ என்கிறார்கள் ஜனநாயகக் கட்சியினர். `முதலில் சுவர் கட்ட பணம் தாருங்கள்… அரசு இயல்பு நிலைக்கு தானாகத் திரும்பும்..’ என்கிறார் ட்ரம்ப்.

அமெரிக்கா – மெக்ஸிகோ எல்லை, கலிபோர்னியா, டெக்ஸாஸ், அரிஸோனா, நியு மெக்ஸிகோவில் பரவி இருக்கிறது. தற்போது 650 மைல் அளவுக்கு தடுப்பு வேலி இருக்கிறது. எதுபோன்ற தடுப்பு வேலி இருக்க வேண்டும் என ட்ரம்ப் விரும்புகிறார் எனத் தெரியவில்லை. அமெரிக்காவுக்குள் ரவுடிகள், கொலைகாரர்கள், பாலியல் குற்றவாளிகள், போதை கடத்தல் ஆசாமிகள் போன்றோர்தான் குடியேற வருகிறார்கள் என ட்ரம்ப் நினைக்கிறார். அவர்களிடமிருந்து அமெரிக்காவை காப்பாற்ற தடுப்புச் சுவர் அவசியம் என கருதுகிறார். ஆனால் புள்ளி விவரங்கள் வேறு விதமாக இருக்கின்றன. மெக்ஸிகோ எல்லையில் கடந்த 2017-ம் ஆண்டில் சட்ட விரோதமாக நுழைந்த 3 லட்சத்து 4 ஆயிரம் பேரை அமெரிக்க போலீஸார் கைது செய்துள்ளனர். ஆனால், அதே ஆண்டில் விமானம் மூலமும் கப்பல் மூலமும் அமெரிக்கா வந்த 6 லட்சத்து 7 ஆயிரம் பேரை, விசா காலத்தை தாண்டி தங்கியிருந்ததாக போலீஸார் கைது செய்துள்ளனர். எனவே, மிகப் பெரிய பிரச்சினை மெக்ஸிகோ எல்லையில் இல்லை.

சட்ட விரோதமாக நுழைந்தவர்கள் அமெரிக்காவில் வேலை பார்ப்பது கடினமாகி விட்டபடியால், கடந்த 10 ஆண்டுகளாக மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்கா வரும் குடியேறிகள் பெரிதும் குறைந்துவிட்டதாகவும் அதனால் தடுப்புச் சுவர்  தேவையில்லை எனவும் ஒரு சாரார் கூறுகின்றனர். அமெரிக்காவில் மொத்தம் 1.30 கோடிப் பேர் சட்டவிரோதமாக தங்கியிருக்கின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர், சட்டப்படி விசா வாங்கி அமெரிக்காவுக்குள் வந்தவர்கள்தான். எல்லோருமே மெக்ஸிகோ வழியாக உள்ளே நுழைந்தவர்கள் கிடையாது. அப்படி இருக்கும்போது, எல்லையில் தடுப்புச் சுவருக்கு என்ன தேவை வந்தது?

அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்தப் பிரச்சினைக்கு விரைவில் சுமூகத் தீர்வு ஏற்படாவிட்டால், பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அரசு ஊழியர்களுக்கு எப்படியும் பின்னாளில் பணம் கிடைத்துவிடும். ஆனால் தனியார், ஒப்பந்த ஊழியர்களுக்குத்தான் மிகவும் சிரமம். இதே நிலை நீடித்தால், கடந்த 2 ஆண்டுகளாக அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டு வந்த முன்னேற்றம் மாறி, பின்னடைவு ஏற்பட்டு விடும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். ஜனநாயக கட்சியினர்தான் அமெரிக்க பின்னடைவுக்கு காரணம் என்ற ட்ரம்பின் கோஷம் வலுவிழந்து வருகிறது. இந்த நீண்ட அரசு முடக்கத்தால், தன்னை தீவிரமாக ஆதரித்து வந்த, கல்லூரி பட்டம் இல்லாத அமெரிக்க வெள்ளையின இளைஞர்களின் ஆதரவை இழந்து வருகிறார் ட்ரம்ப். ஆரம்பத்தில் 54 சதவீதம் பேர் ஆதரித்தனர். இப்போது இது 45 சதவீதமாகக் குறைந்து விட்டது.

இதேபோன்று கடந்த 1995-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ம் தேதி அமலில் இருந்த ஒரு அரசு முடக்கத்தின்போதுதான் வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த மோனிகா லெவின்ஸ்கி, பீட்ஸா பார்சலுடன் சென்று அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டனுடன் கொஞ்சிக் கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தால்தான் அதிபர் பதவியையே இழந்தார் பில். இதுவரை பீட்ஸா பற்றி எந்தத் தகவலும் இல்லை. கால்பந்து வீரர்களுக்கு ஹம்பர்க்கரும் பிரெஞ்ச் ஃபிரையும்தான் பரிமாறப்பட்டிருக்கிறது.

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் பேராசிரியர்,

வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்.

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x