Published : 23 Jan 2019 05:48 PM
Last Updated : 23 Jan 2019 05:48 PM
இந்தோனேசியாவில் பெய்துவரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய இந்தோனேசியாவில் கனமழை பெய்துவருவதால் அங்குள்ள அணைகள் நிரம்பிவழிகின்றன. இதனால் மத்திய இந்தோனேசிய பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை பின்னிரவிலிருந்து வெள்ளம் பெருகிவருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கோவா மாவட்ட ஆட்சியர் அத்நான் புரிச்டா இச்ஸான் தெரிவித்த விவரம்:
இந்தோனேசியாவின் எதிர்பாராத கனமழையினால் பில்லி பில்லி அணையில் வெள்ளநீர் நிரம்பிவிட்டது. அணைக்கு ஆபத்து ஏற்படும் என்ற சூழ்நிலை ஏற்பட்டதால் நீரை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டது. இதனால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கவும் எங்களுக்கு அவகாசம் இல்லை.
இதுவே மக்கள் குடியிருக்கும் ஆற்றோரப் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுக்க காரணமாகிவிட்டது. பல இடங்களில் பாலங்கள் உடைந்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.
இதனால், தெற்கு சலாவேஸி மாகாணத்தின் மகாஸருக்கு அருகில் நேற்று பின்னிரவில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் 2 குழந்தைகள் மூழ்கி இறந்தனர். அப்போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காணவில்லை என கூறுகிறார்கள்.
இந்தோனேசியாவின் பருவ மழையின் போது கொடிய நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் அடிக்கடி நிகழும். ஜாவாவின் பிரதான தீவில் சுகாபூமில் நிலச்சரிவில் இந்த மாத தொடக்கத்தில் 32 பேர் கொல்லப்பட்டனர்.
நேற்றிரவு வெள்ளத்தினால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அடிக்கடி இங்கு கொடிய நிலச்சரிவு பகுதிகளில் சென்று தேடும் படலம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதிகளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கக் கூடுமென அஞ்சுகிறோம்.
தற்போது வெள்ள பாதிப்பு காரணமாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அணைநீர் பெருகும் ஆற்றங்கரையோர குடியிருப்புவாசிகள் வெளியேற்றப்பட்டு அரசு அலுவலகங்களிலும் மசூதிகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இச்ஸான் தெரிவித்தார்.
இந்தோனேசிய தொலைக்காட்சி வீடியோக்கள், வெள்ளத்தில் பாதியளவு மூழ்கியுள்ள வீடுகள் மற்றும் மீட்புப் படகுகளில் சென்ற மீட்புப் பணியாளர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை டயர் டியூப்கள் மூலம் அவர்களை மீட்டுவரும் காட்சிகள் யூடியூப்பில் பதிவேற்றப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT