Last Updated : 03 Jan, 2019 10:17 AM

 

Published : 03 Jan 2019 10:17 AM
Last Updated : 03 Jan 2019 10:17 AM

மோடியைக் கிண்டல் செய்த ட்ரம்ப்: ஆப்கனில் நீங்கள் உருவாக்கிய நூலகத்தால் என்ன பயன்

ஆப்கானிஸ்தானில் இந்தியா அமைத்துக் கொடுத்த நூலகம் யாருக்கும் பயனில்லாமல் இருக்கிறது என்று பிரதமர் மோடியைக் கிண்டல் செய்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று தனது மாளிகையில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அளித்துள்ள நிதியுதவி குறித்துப் பேசினார்.

இது தொடர்பாக ட்ரம்ப் கூறுகையில் “ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ ஏராளமான பணிகளை அமெரிக்கா செய்துள்ளது, அந்நாட்டு மக்களுக்காக ஏராளமான முதலீடுகளையும் செய்துள்ளது.

ஆனால், இந்தியப் பிரதமர் மோடி அடிக்கடி என்னிடம், ஆப்கானிஸ்தானில் நாங்கள் நூலகம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம் என்கிறார். உங்களுக்குத் தெரியுமா, அந்த நூலகம் எங்கே இருக்கிறது?. போர் நடந்து கொண்டிருக்கும் அந்த நாட்டில் நூலகம் அமைத்து யாருக்கு என்ன பயன். அந்த நூலகத்தில் அமர்ந்து 5 மணிநேரம் செலவு செய்திருப்போமா.

பிரதமர் மோடி அவ்வாறு கூறியதற்கு, ஓ அப்படியா நூலகம் அமைத்துக் கொடுத்தமைக்கு நன்றி என்று கூறிவிட்டேன். ஆப்கானிஸ்தானில்  நீங்கள் (பிரதமர் மோடி) அமைத்துக் கொடுத்த நூலகத்தை யார் பயன்படுத்துகிறார்கள் என்று எனக்குத் தெரியாது.

இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்.

ஆனால், உண்மையில் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு 300 கோடி டாலர் அளவுக்கு நிதியுதவி அளிக்க உறுதியளித்துள்ளது. காபூல் நகரில் உயர்ந்த தரத்திலான பள்ளிக்கூடம் கட்டவும், ஆயிரம் ஆப்கானிஸ்தான் மாணவர்கள் உதவித்தொகையுடன் இந்தியாவில் கல்வி பயிலவும் இந்தியா உதவும் என உறுதியளித்துள்ளது.

குண்டுவெடிப்பில் சேதமடைந்த ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தைச் சீரமைத்துக் கொடுத்து, அந்தக் கட்டிடத்தை கடந்த 2015-ம் ஆண்டு பிரமதர் மோடி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் எதிராகப் போரிட்டு வந்த அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை 14 ஆயிரத்தில் இருந்து பாதியாகக் குறைத்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார்.

மேலும், சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுவிட்டோம் எனக் கூறி, அங்கிருந்து அமெரிக்கப் படைகள் அனைத்தையும் வெளியேறவும் அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x