Published : 21 Sep 2014 09:49 AM
Last Updated : 21 Sep 2014 09:49 AM
இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈரானுக்கும் முக்கிய பங்கு உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிரியா, இராக்கில் கணிசமான பகுதிகளை இஸ்லாமிக் ஸ்டேட் கிளர்ச்சிப் படை கைப்பற்றியுள்ளது. இரு நாடுகளின் அரசுகளால் அந்த அமைப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இராக் தலைநகர் பாக்தாதை நோக்கி கிளர்ச்சிப் படை முன்னேறிய நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஐ.எஸ்.ஸுக்கு எதிராக அண்மையில் போரில் குதித்தன.
ஈரானுடன் மறைமுக பேச்சு
மேலும் வளைகுடா பகுதியைச் சேர்ந்த சுமார் 40 நாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் பரம எதிரியான ஈரானுடனும் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறப்படு கிறது.
இதுகுறித்து ஈரானின் மூத்த தலைவர் அயத்துல்லா அலி கொமேனி அண்மையில் நிருபர்களிடம் பேசியபோது, ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரில் தங்களுடன் இணையுமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டது, அதனை நிராகரித்துவிட்டோம் என்று தெரிவித்தார்.
ஜான் கெர்ரி அழைப்பு
ஈரானுடன் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா தயங்கி வருகிறது. கடந்த வாரம் ஜெட்டாவில் நடைபெற்ற வளைகுடா நாடுகளின் ஆலோ சனைக் கூட்டத்தில் ஈரானுக்கு மட்டும் அழைப்பு அனுப்பப்படவில்லை.
இந்தப் பின்னணியில் ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்றது. இதில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி பேசியபோது, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈரான் உட்பட ஒவ்வொரு நாடுகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது என்று தெரிவித்தார்.
இதன்மூலம் ஈரானுக்கு அவர் பகிரங்கமாக அழைப்பு விடுத்தி ருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஈரான் ஆதரவு
சிரியா, இராக்கில் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். ஈரானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அந்த வகையில் ஐ.எஸ்.ஸுக்கு எதிரான போருக்கு ஈரானும் மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT