Published : 31 Dec 2018 08:02 AM
Last Updated : 31 Dec 2018 08:02 AM

காவலாளியாக இருக்க விரும்பாத அமெரிக்கா

உலக நாடுகளின் காவலாளியாக இருக்க அமெரிக்கா விரும்பவில்லை என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறுவது இது முதன்முறையல்ல. இதற்கு முக்கிய காரணம், அமெரிக்க மக்களின் வரிப் பணத்தை வாங்கிக் கொண்டு கூட்டணி நாடுகள் வாக்களித்தபடி செயல்படுவதில்லை என்பதுதான். ட்ரம்ப் மட்டுமல்ல, இதற்கு முன்பு இருந்த அமெரிக்காவின் அதிபர்களும், இதே காரணத்தைக் கூறியிருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளையும் ஆசிய பசிபிக் நாடுகளில் குறிப்பாக ஜப்பானையும் மனதில் வைத்து இதைக் கூறியிருக்கிறார் ட்ரம்ப். கூட்டணி நாடுகளுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்து வரும் இந்த நேரத்தில், பாதுகாப்பு படைகளின் சுமையை பகிர்ந்து கொள்ளும் செலவும் அதிகரித்து வருகிறது.

இராக்கில் தங்கியுள்ள அமெரிக்க படையினரைப் பார்ப்பதற்காக கிறிஸ்துமசையொட்டி, அங்கு சென்றிருந்த போதுதான் ட்ரம்ப் இப்படி பேசியிருக்கிறார். சிரியாவில் இருந்தும், ஆப்கானிஸ்தானில் இருந்தும் அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து தான் அமெரிக்க ராணுவ அமைச்சர் ஜேம்ஸ் மாட்டிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். சிரியாவில் பிரச்சினை தீர்ந்து விட்டதாகவும் அங்கு அமெரிக்க படைகளுக்கு வேலை இல்லை என்றும் ட்ரம்ப் கருதுகிறார். சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்கத்தான் அமெரிக்க படைகள் அங்கு சென்றன. ஆனால், அங்கு ஐஎஸ் தீவிரவாதிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பே கருதவில்லை. ஐஎஸ் தீவிரவாதிகளின் பலம் குறைந்துள்ளது. அவ்வளவுதான். அவர்கள் அழிக்கப்படவில்லை. சிரியாவில் இருந்தும் ஆப்கானிஸ்தானில் இருந்தும் அமெரிக்க படைகள் விலக்கிக் கொள்ளப்படும் என்ற அறிவிப்பால், தீவிரவாதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து, மத்திய கிழக்கிலும் அதைத் தாண்டியும் தங்கள் அட்டகாசத்தை தொடர்ந்து நடத்துவார்கள்.

ட்ரம்பின் ரகசிய இராக் பயணத்தில் பிரச்சினைகளுக்கும் பஞ்சமில்லை. இராக்கில் 5,000 அமெரிக்க வீரர்கள் தங்கியுள்ளனர். அல் ஆசாத் விமான தளம் சென்ற ட்ரம்ப், அங்கிருந்த சிறப்பு படையினரைத்தான் சந்தித்துள்ளார். இராக் பிரதமருடன் திட்டமிட்டிருந்த சந்திப்பும் நடக்கவில்லை. இருவரும் போனில் மட்டுமே பேசிக் கொண்டனர். அதிபரின் இராக் பயணம் குறித்து இராக் பிரதமருக்கு முன்னதாக எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் விமானத் தளத்துக்கு வரும்படி வெள்ளை மாளிகை விடுத்த அழைப்பை பிரதமர் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அமெரிக்கா இன்னும் ஆக்கிரமிப்பு நாடாகவே நடந்து கொள்கிறது என இராக்கின் அரசியல்வாதிகள் விமர்சனம் செய்துள்ளனர். இதையடுத்து, தொடர்ந்து இராக்கில் அமெரிக்க படைகள் இருக்கலாமா, அனுப்பி விடலாமா அல்லது படைகளைக் குறைக்கலாமா என்ற பேச்சும் அங்கு எழுந்துள்ளது. இராக் தலைவர்களை ட்ரம்ப் சந்திக்காததும் பிரச்சினையைக் கிளப்பியுள்ளது.

உலக நாடுகளின் காவலாளியாக இருக்க அமெரிக்கா விரும்பவில்லை என ட்ரம்ப் நினைத்தால் அது இராக்குக்கும் பொருந்தும்தானே. ஆனால், இராக்கில் தொடர்ந்து அமெரிக்க படைகள் இருக்கும் என்றும் தேவைப்பட்டால், சிரியாவுக்கு இங்கிருந்து படைகள் அனுப்பப்படும் என்றும் ட்ரம்ப் கூறியிருக்கிறார். சிரியாவில் ராணுவ நடவடிக்கை எடுக்க, இராக்கை ராணுவ தளமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் கூறியிருக்கிறார். அல் ஆசாத் விமான தளம் இராக் மற்றும் சிரியாவின் எல்லையில் அமைந்துள்ளது. சிரியா, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக, அமெரிக்க ராணுவத் துறையில் இன்னமும் குழப்பம் நீடிக்கிறது. இந்த இரு நாடுகளில் இருந்தும் இப்போதைக்கு படைகளை விலக்கிக் கொள்ளப் போவதில்லை என அமெரிக்க ராணுவ அதிகாரிகளே கூறியுள்ளனர்.

உலக நாடுகளின் காவலாளியாக இருக்க வேண்டாம் என அமெரிக்கா நினைப்பதில் அர்த்தம் இருக்கிறது. இதன் மூலம் தேவையில்லாமல் செலவழிப்பது குறையும் என்றும் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்க வீரர்கள் சடலமாக நாடு திரும்பு வது நிற்கும் என்றும் ட்ரம்பின் ஆதரவாளர்கள் சந்தோஷமடைந் துள்ளனர். ஆனால், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை தலை கீழாக மாற்றுவதை அமெரிக்க ராணுவ அதிகாரிகளே கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். வெளி நாடுகளில் பாதுகாப்பு பணியில் இருக்கும் வீரர்களின் எண்ணிக் கையைக் குறைப்பது என்பது வேறு, ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியை மீறி அனைத்து வீரர்களையும் வாபஸ் பெறுவது என்பது வேறு. இது அமெரிக்காவின் நலனையும் பாதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

 டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் பேராசிரியர்

வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x