Last Updated : 23 Dec, 2018 09:07 AM

 

Published : 23 Dec 2018 09:07 AM
Last Updated : 23 Dec 2018 09:07 AM

இந்தோனேசியாவில் சுனாமி தாக்கியது: 43 பேர் பலி; 600 பேர் காயம்: 20 மீட்டர் உயரத்துக்கு அலை எழும்பியது

இந்தோனேசியாவின் ஜவா மற்றும் சுமத்ரா தீவுகளில் இன்று அதிகாலை நேரத்தில் சுனாமி தாக்கியதில் 43 பேர் பலியானார்கள், 600-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு ஆகியவற்றால் அதிகாலை 2.30 மணி அளவில் செராங், பன்டேகிளாங், சவுத் லாம்பங் ஆகிய பகுதிகளில் திடீரென இந்த சுனாமி ஏற்பட்டது என்று பேரிடர் மேலாண்மைதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுனாமி தாக்கியதில் நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள், வர்த்தக கட்டிடங்கள் இடிந்து பலத்த சேதத்துக்கு உள்ளாகின. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட சுனாமியால் இன்னும் உயிர்ச் சேத விவரங்கள் முழுமையாக வெளிவரவில்லை.

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி ஏற்பட்ட சுனாமியில் இந்தோனேசியாவில் மட்டும் 1.20 லட்சம் பலியானார்கள். அந்த நினைவு தினம் அனுசரிக்க இன்னும் 3 நாட்கள் இருக்கும் நிலையில், இந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது.

இந்தோனேசியா நிலவியல் மற்றும் வானிலை மையத்தின் ஆய்வாளர்கள் கூறுகையில், “ அனாக் கிராகட்டு பகுதியில் உள்ள மிகப்பெரிய எரிமலை வெடித்ததன் காரணமாகவும், கடலுக்கு அடியில் நிலச்சரிவு ஏற்பட்டதாலும் இந்த சுனாமி ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நேற்று பவுர்ணமி என்பதால், கடல் ஆவேசமாகக் காணப்பட்டது. அனைத்து ஒன்று சேர்ந்த நிகழ்வால் சுனாமி அலைகள் உருவாகின. உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணிக்கு இந்த சுனாமி அலைகள் ஏற்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த சுனாமியால், ஜாவா தீவில் உள்ள பன்டேகிளாங் மண்டலத்தின் பான்டென் பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில்தான் புகழ்பெற்ற ஜங் குலான் தேசிய பூங்கா, புகழ்பெற்ற கடற்கரைகள் இருக்கின்றன. அவை கடுமையாக சேதத்துக்கு உள்ளாகியிருக்கின்றன என்று பேரிடர் மேலாண்மைதுறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சுமத்ராவின் தெற்குப் பகுதியில் உள்ள பந்தர் லம்பங் நகரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள ஆளுநர் அலுவலகத்தில் பாதுகாப்பாக தங்கியுள்ளனர்.

இந்திய பெருக்கடலில் ஜாவா கடற்கரையில், சுந்தா ஜலசந்தியில் உள்ள அனாக் கிராகாகட்டு எரிமலை 305 மீட்டர் உயரம் கொண்டது. தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 200 கி.மீ தொலைவில் இந்த எரிமலை அமைந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து குமுறிக்கொண்டே இருந்த எரிமலை தற்போது வெடித்துள்ளது.

இந்த சுனாமியால் 43 பேர் இறந்துள்ளதாகவும், 600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆயிரக்கணக்கில் மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து பாதுகாப்பான இடங்களி்ல தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று இந்தோனேசியா பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது.

பண்டேகிளாங் பகுதியைச் சேர்ந்த ஓய்ஸ்டின் லுன்ட் ஆன்டர்ஸன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், “ நான் கடற்கரையில் நின்று எரிமலை வெடித்ததைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது 20 மீட்டர் உயரத்துக்குக் கடல் அலை எழும்பியதைப் பார்த்து நான் தப்பித்து ஓடினேன்.

அடுத்த அலை எழும்பி கடற்கரைப்பகுதியில் இருந்த ஹோட்டலுக்குள் புகுந்தது.நான் கருக்கு பின்னால் இருந்த தூணை இருக்கமாகப் பிடித்து மறைந்துகொண்டேன். அதன்பின் உள்ளூர் மக்களின் உதவியுடன் எனது குடும்பத்தாரை பாதுகாப்பாக மீட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சுனாமி தாக்கிய பகுதியில் ஏராளமான மக்களைக் காணவில்லை என்பதால் உறவினர்களை இழந்தவர்கள் கடற்கரையில் தேடி வருகின்றனர். இதனால், உயிர்ப்பலி மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x