Last Updated : 18 Sep, 2014 12:52 PM

 

Published : 18 Sep 2014 12:52 PM
Last Updated : 18 Sep 2014 12:52 PM

தலை துண்டிப்பு மிரட்டல்: ஐ.எஸ். படைக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் உஷார் நிலை

'தலை துண்டிப்பு மிரட்டல்: ஐ.எஸ். படைக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் உஷார் நிலை'

தங்களிடம் சிக்கும் ஆஸ்திரேலிய பொதுமக்களை உத்தேசமாக தேர்வு செய்து, பொது இடத்தில் வைத்து தலையை துண்டிக்கும் செயலில் ஈடுபட ஐ.எஸ்.ஐ.எஸ். திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமது நாட்டின் உளவுத் துறை விடுத்த இந்த எச்சரிக்கையை அடுத்து, விவரம் எதனையும் குறிப்பிடாமல், நாட்டுக்கு பயங்கரவாத தாக்குதலால் ஆபத்து உள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "தமது ஆதரவாளர்களைக் கொண்டு சிட்னி, பிரிஸ்பேன் உள்ளிட்ட நகரங்களில் குடிமக்களை பொது இடங்களில் படுகொலை செய்ய ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சி அமைப்பு உத்தரவிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.

இதனை வெறும் சந்தேகப் பார்வையோடு நிறுத்திவிடாமல், அவர்களின் நோக்கம் அறிந்து, நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள அசம்பாவிதத்தை தடுக்கும் நடவடிக்கைகளில் ஆஸ்திரேலிய அரசு இறங்கியுள்ளது" என்றார்.

பொது இடத்தில் 'தலை துண்டிப்பு' படுகொலை நடத்த சதி

இந்த எச்சரிக்கை தொடர்பான விரிவான தகவல் எதையும் ஆஸ்திரேலிய அரசு வெளியிடாத நிலையில், சிட்னி போன்ற வர்த்தக நகரங்களில் உள்ள மக்கள் எவரையும், ஐ.எஸ். அமைப்பின் கொடியால் போர்த்தி, பொது இடத்தில் தலையை துண்டித்து படுகொலை செய்திட திட்டமிடபட்டுள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில், வீடு வீடாக சென்று பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தப் பணிகளில் 800-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர். இதுவரை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியவர்களாக சந்தேகிக்கப்பட்ட 15-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராக் மற்றும் சிரியாவில் தாக்குதல் நடத்திவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள், தங்கள் வசம் பிணைக் கைதிகளாக இருந்த அமெரிக்க பத்திரிகையாளர்கள் ஜேம்ஸ் ஃபோலே, ஸ்டீவன் சாட்லாஃப் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த உதவிப் பணியாளர் டேவிட் ஹெய்ன்ஸ் ஆகியோரை படுகொலை செய்து வீடியோ வெளியிட்டதுடன், மேலும் சில பிரிட்டன் மற்றும் அமெரிக்கர்களை தங்களது ஆதரவாளர்களின் உதவியோடு படுகொலை செய்ய உள்ளதாக அச்சுறுத்தல் விடுத்தது.

ஐ.எஸ். சதிக்கு எதிரான நடவடிக்கைகளில், இங்கிலாந்து, ரஷ்ய, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், அந்த இயக்கத்தில் சேர முயற்சித்தவர்கள், பல ஆண்டு காலமாக அந்த இயக்கத்தில் செயல்பட்டு வந்தவர்கள் என பலர் கடந்த சில நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x