Published : 20 Sep 2014 04:00 PM
Last Updated : 20 Sep 2014 04:00 PM
அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான 'டைம்', இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு 'நாளைய உலகின் தலைவன்' என்று பட்டம் சூட்டி கவுரவப்படுத்தியுள்ளது.
பெங்களூரில் வசிப்பவர் அலோக் ஷெட்டி (28). கொலம்பியா பல்கலைக் கழகத்தில் கட்டிடக் கலை தொடர்பான முதுநிலைப் படிப்பை முடித்த இவர், தற்போது கட்டிடக் கலைஞராகப் பணியாற்றி வருகிறார்.
பெங்களூரில் உள்ள பரிணாம் அறக்கட்டளை எனும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அந்நகரத்தில் உள்ள எல்.ஆர்.டி.இ. குடிசைப் பகுதியில் உள்ள ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார்.
எந்த மழையையும், வெள்ளத்தையும் தாங்கி நிற்கும் என்பதே இந்த வீடுகளின் சிறப்பம்சமாகும். மூங்கில் மற்றும் மரக்கட்டைகள் கொண்டு இந்த வீடுகளைக் கட்ட 300 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.18,000) செலவாகும். இந்த வீட்டை சுமார் நான்கு மணி நேரத்தில் கட்டி முடித்துவிட முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
இந்த வீடுகளை மேலும் பல ஏழைகளுக்குக் கட்டித்தர மானியம் கேட்டு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார் அலோக் ஷெட்டி. இவரது இந்தச் சேவையைப் பாராட்டி 'டைம்' பத்திரிகை இவரை 'நாளைய உலகின் தலைவன்' என்று தேர்வு செய்து கவுரவப்படுத்தி யுள்ளது.
தனது பணியைப் பற்றி அலோக் ஷெட்டி கூறும்போது, "எப்போதுமே எளிய தீர்வுகள்தான் சிறந்த தீர்வுகளாகவும் இருக்கும். இயற்கைப் பேரிடர்களைத் தாங்கும் திறன் கொண்ட கட்டிடங்களைக் கட்டுவதே இப்போதைய தேவையாகும். இதன் மூலம் நமது வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பிரச்னைகளைத் தீர்க்க முடியும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT