Last Updated : 24 Dec, 2018 08:41 PM

 

Published : 24 Dec 2018 08:41 PM
Last Updated : 24 Dec 2018 08:41 PM

சூறையாடிய இந்தோனேசிய சுனாமி;  ‘எல்லாம் போய்விட்டது’: உடைந்து கடலுக்குள் விழுந்த எரிமலையின் ஒரு பெரும்பகுதி; பலி எண்ணிக்கை 373 ஆக உயர்வு

இந்தோனேசியாவின் ஜாவா-சுமத்ரா தீவுகளுக்கு இடையே உள்ள  சுந்தா ஜலசந்தியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு மற்றும் கடலடி நிலச்சரிவுகளினால் முன்னெப்போதும் காணாத 20 மீ உயரத்துக்கு ராட்சத சுனாமி அலைகள் கடற்கரைத் தீவுகளைத் தாக்க பலி எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது, ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து சுமார் 12,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

 

சுனாமி பேரலை குறித்து ஆசெப் சுனேரியா என்பவர் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்தாரிடம் கூறும்போது, மிகப்பெரிய அளவில் ‘வூ.....ஷ்’ என்று பெரும்சப்தம் கேட்டது, கண்ணிமைக்கும் நேரத்தில் அலைச்சுவர் இவரை மோட்டார் பைக்கிலிருந்து தூக்கி எறிந்து, இவர் வீட்டையும் கிராமத்தையும் சுருட்டி விழுங்கியுள்ளது.

 

“கடல் அலை மிகப்பெரிய காற்று போல் ‘வூ...ஷ்’ என்ற மிகப்பெரும் சப்தத்துடன் வந்தது, நான் அதிர்ச்சியில் உறைந்தேன், எச்சரிக்கை இல்லை ஒன்றும் இல்லை, நான் முதலில் வெறும் கடல் அலை என்றுதான் நினைத்தேன் ஆனால் அதன் உயரம் பீதியூட்டும் அளவுக்கு அதிகரித்தது.

 

நானும் என் குடும்பத்தினரும் கண்மண் தெரியாமல் சுகரமே கிராமத்திலிருந்து உயரமான இடத்துக்குச் சென்றோம்,  வெறும் உடை தவிர எதுவும் இல்லை. என் குடும்பம் பாதுகாப்பு எய்தியது.. ஆனால் எல்லாம் போய்விட்டது. நான் இப்போது உடல்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். எங்கு அடித்துச் சென்று எங்கு கொண்டு போய் போட்டதோ தெரியவில்லை, என்று முகத்தில் பீதிமாறாமல் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

இன்னொரு கிராமவ்வாசி சுனார்த்தி என்ற பெண், உடைந்து சிதைந்த தன் வீட்டில் இடுப்பளவு தண்ணீரில் மிச்சம் மீதி ஏதாவது இருக்கிறதா என்பதைத் தேடிக்கொண்டிருந்தார்.

 

“இங்குதான் 2 சடலங்கலை நேற்று கண்டேன்.  என்னுடைய 100 வயது தாயார் தப்பித்தார்,  என் வாழ்க்கை ஏற்கெனவே கடினமானது, நாங்கள் ஏழைகள் ஆனால் இப்போது இது நடந்துள்ளது” என்றார்.

 

சிலுரா கிராமத்தில் சுனாமியில் பிழைத்த அடே ஜுனேதி “அனைத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்தது. நான் என் வீட்டில் விருந்தாளிகளுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது என் மனைவி வீட்டின் வாசற்கதவைத் திறந்தாள், அவள் அலறியடித்துக் கொண்டு வந்தாள், என்ன ஏது என்று நாங்கள் பதறிப்போனோம். நான் ஏதோ தீப்பிடித்து விட்டது என்றுதான் முதலில் நினைத்தென்,  ஆனால் என்ன நடந்தது என்று வாசலில் சென்று பார்த்த போது பெரிய நீர்ச்சுவர் ஒன்று விட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது.” இப்போது பாதுகாப்பாக இருக்கிறோம்” என்றார்.

 

ஆனால் இன்னும் பாதிக்கப்பட்ட கிராமங்கள் பலவற்றுக்கு மீட்புப் படையினர் வர முடியவில்லை, இங்கெல்லாம் இன்னும் மக்கள் உண்ண உணவின்றி, குடிநீரின்றி வாடி வருகின்றனர்.

 

எரிமலையின் ஒரு பெரும்பகுதி உடைந்து கடலுக்குள் விழுந்ததால் நிலச்சரிவு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழும்பியுள்ளன என்பதை விஞ்ஞானிகள் தற்போது உறுதி செய்துள்ளனர்.  சுமார் 600 வீடுகள், 60 கடைகள், 420 படகுகள், கப்பல்கள் உள்ளிட்டவை உடைந்து நொறுங்கி ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x