Last Updated : 27 Nov, 2018 11:21 AM

 

Published : 27 Nov 2018 11:21 AM
Last Updated : 27 Nov 2018 11:21 AM

பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடம் ‘வீடு’: ஐ.நா. அதிர்ச்சித் தகவல்

வீட்டின் நிர்வாகி, குடும்பத்தின் விளக்கு என்றெல்லாம் பெண்களை வீட்டோடு தொடர்புபடுத்தி பெருமையாகப் பேசிவரும் நிலையில், பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு தான் என்று ஐ.நா. தனது ஆய்வில் தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

ஏனென்றால் கடந்த ஆண்டு உலக அளவில் பெண்கள் தங்களின் கணவனாலும், தங்களின் பெற்றோர், சகோதரர்களால் ஆணவக் கொலையாலும், வரதட்சணைப் பிரச்சினையால் உறவினர்களாலும்  அதிகமாகக் கொல்லப்பட்டுள்ளதால், பெண்கள் வாழ்வதற்கு வீடு ஆபத்தான இடம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25-ம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு பெண்களுக்கு எதிராகக் கடந்த ஆண்டு நடந்த வன்முறைகள் குறித்த அறிக்கையை ஐ.நா.வின் போதை மருந்து மற்றும் குற்றத்தடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் உலக அளவில் 50 ஆயிரம் பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட இந்தப் பெண்கள் அனைவரும் அவர்களின் கணவரால், அல்லது முன்னாள் கணவரால்அல்லது குடும்ப உறுப்பினர்கள், பெற்றோரால் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சிக்குரியதாகும்.

அதாவது கடந்த ஆண்டில் நாள் ஒன்றுக்கு 137 பெண்கள், ஒரு மணிநேரத்துக்கு 6 பெண்கள் தங்களின் குடும்ப உறுப்பினரால், பெற்றோரால், கணவரால் கொல்லப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் ஆண்களால் தாங்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை #மீடு இயக்கம் மூலம் பெண்கள் வெளிக்கொண்டு வந்தனர். அவ்வாறு இருந்தும், இன்னும் பெண்கள் தங்களின் பெற்றோர், கணவரால் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது.

கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டுக்கு இடையே பெண்கள் தங்களின் கணவர்கள், குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்ட விகிதாச்சாரத்தின் அளவு அதிகரித்துள்ளது. பெரும்பாலும் தங்களின் கணவராலும், வரதட்சணைக் கொடுமையாலும், சாதிமாறி செய்யப்படும் திருமணத்தால் நடக்கும் ஆணவக் கொலையாலும் கொல்லப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐநாவின் போதை மருந்து மற்றும் குற்றத்தடுப்பு அமைப்பின் இயக்குநர் யூரி பெடோடோவ் கூறுகையில், “ ஆண்கள் கொலை செய்யப்பட்டாலும், பாலின சமத்துவத்தாலும், வேறுபாட்டாலும் பெண்களே அதிகமாகக் கொலை செய்யப்படுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

பெண்கள் உரிமைக்கான சர்வதேச அமைப்பான ‘உமன்கைன்ட் வேர்ல்ட்வைட்’ அமைப்பின் இயக்குநர் சாரா மாஸ்டர்ஸ் கூறுகையில் “ பாலின சமத்துவத்தின் விளைவுகள்தான் பெண்களுக்கு எதிரான வன்முறையாக மாறுகிறது. இந்த அறிக்கையைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது” என வேதனை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x