Published : 01 Nov 2018 12:37 PM
Last Updated : 01 Nov 2018 12:37 PM
விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தில் இருந்து கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தோனேசியாவில் லயன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் கடலில் விழுந்து மூழ்கியதில் 189 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். விமானத்துக்கும் விமான கட்டுப்பாட்டு அறைக்கும் உள்ள தகவல் தொடர்பு பதிவின்படி அந்த விமானம் விபத்துக்குள்ளானபோது 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது தெரியவந்தது.
அதையடுத்து, ஜகார்த்தாவின் இந்தியப் பெருங்கடல் பகுதியின் வடகடலில் உள்ள தன்ஜுங் பிரியோக் என்ற இடத்தில் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மீட்புப் படையினர், கடற்படையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர். அதிநவீன மீட்பு ஹெலிகாப்டர்கள் மூலமும் தேடுதல் பணிகள் நடைபெற்றன. மீட்புப் பணிகளில் இந்தோனேசிய கடற்படையைச் சேர்ந்த கேஆர்ஐ ரிஜெல்-933 என்ற கப்பல் ஈடுபட்டது. சுமார் 40 ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் கடலில் இறங்கி தேடினர்.
அதைத் தொடர்ந்து விமானம் விழுந்த பகுதியில் பயணிகளின் ஹேண்ட் பேக்குகள், அடையாள அட்டைகள், செல்போன்கள், டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட உடைமைகள் கடலில் மிதப்பதை மீட்புப் படையினர் கண்டுபிடித்து அவற்றைக் கைப்பற்றினர்.
விபத்து நடந்தபோது விமானி அறையில் நடந்த உரையாடல்கள் விமானத்தில் உள்ள கருப்புப் பெட்டியில் (பிளாக் பாக்ஸ்) பதிவாகி இருக்கும். இதையடுத்து, விமான விபத்து நடந்த கடல் பகுதியில் கருப்புப் பெட்டியைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில் கருப்புப் பெட்டியைக் கைப்பற்றியுள்ளதாக ஆழ்கடல் நீச்சல் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொலைக்காட்சி நிறுவனத்திடம் பேசிய ஹேந்திரா என்னும் வீரர், ''கருப்புப் பெட்டி கடலின் அடியில், மண்ணுக்கடியில் புதைந்திருந்தது. அதைத் தோண்டியெடுத்துக் கண்டுபிடித்துள்ளோம். அது ஆரஞ்சு நிறத்தில் பழுதுபடாமல் இருந்தது'' என்றார்.
கருப்புப் பெட்டி விமானத்தின் தகவல்களைப் பதிவு செய்யும் சாதனமா அல்லது விமானி அறை (காக்பிட்) உரையாடல்களைப் பதிவு செய்யும் சாதனமா என்பது இன்னும் தெரியவில்லை. பொதுவாக இவை இரண்டுமே கருப்புப் பெட்டியாகக் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து விபத்துக்கான காரணங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT