Last Updated : 21 Nov, 2018 07:59 AM

 

Published : 21 Nov 2018 07:59 AM
Last Updated : 21 Nov 2018 07:59 AM

காபூலில் மதகுருக்கள் பங்கேற்ற விழாவில் மனித வெடிகுண்டு தாக்குல்: 50 பேர் பலி; 80க்கும் மேற்பட்டோர் காயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர், காபூலில் முஸ்லிம் மதகுருக்கள் நடந்திய கூட்டத்தில், நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இது குறித்து ஆப்கானிஸ்தான் பொது சுகாதாரத்துறை அமைச்சர் வாஹித் மஜ்ரோ கூறியதாவது:

''காபூலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இறைத்தூதர் முகமது நபியின் பிறந்த நாளை முன்னிட்டு மதகுருக்கள், பண்டிதர்கள் நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து கொண்டாட்டத்துக்கு நேற்று இரவு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது, அந்த மண்டபத்துக்குள் நுழைந்த மர்ம நபர் தனது உடலில் கட்டயிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் சம்பவ இடத்திலேயே 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 20 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பினரும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால், தலிபான் தீவிரவாதிகள், ஐஎஸ் அமைப்பினர் ஏற்கெனவே இதுபோன்று மதகுருக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர்களைச் சந்தேகிக்கிறோம்''.

இவ்வாறு அமைச்சர் வாஹித் தெரிவித்தார்.

காபூல் போலீஸ் செய்தித்தொடர்பாளர் பசீர் முஜாஹித் கூறுகையில், ''இந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட அனைவரும் மதகுருக்கள் என்பது துரதிஷ்டவசமானது. இந்தக் கொண்டாட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை என்று எங்களிடம் கோரவில்லை. அதனால், மனித வெடிகுண்டாக வந்தவர் எளிதாக மண்டபத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளார்'' எனத் தெரிவித்தார்.

சம்பவத்தை நேரில் பார்த்த மண்டபத்தில் பணியாற்றிய பணியாளர் முகமது முஜாமில் கூறுகையில், ''நான் அனைவருக்கும் குடிப்பதற்காக தண்ணீர் கொண்டுவரச் சென்று இருந்தேன். தண்ணீர் கொண்டு வருகையில், பயங்கரமான சத்தம் கேட்டது, மண்டபத்துக்குள் இருந்து கரும்புகை வெளியேறியது. அங்கு ஓடிச்சென்று நான் பார்த்தபோது, நாற்காலிகள் சிதறிக்கிடந்தன. ஏராளமானோர் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்'' எனத் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி சாலையை போலீஸார் சீல் வைத்து மூடியுள்ளனர். காயமடைந்தவர்களின் உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் குழுமியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்பர் கானி இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மனிதநேயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று அவர் கண்டித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x