Published : 25 Aug 2014 11:19 AM
Last Updated : 25 Aug 2014 11:19 AM

காந்தி திரைப்பட இயக்குநர் ரிச்சர்ட் அட்டன்பரோ காலமானார்

'காந்தி' படத்தை இயக்கிய இங்கிலாந்தின் பழம்பெரும் அடையாள இயக்குநரும் நடிகருமான ரிச்சர்ட் அட்டன்பரோ காலமானார். அவருக்கு வயது 90.

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த வரலாற்று திரைப்படமான 'காந்தி', 1982-ஆம் ஆண்டு அட்டன்பரோவுக்கு, சிறந்த இயக்குநர் உள்ளிட்ட எட்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று தந்தது.

1926 ஆண்டு பிறந்து இங்கிலாந்து படங்களில் தனி அடையாள இயக்குநராக திகழ்ந்தார் ரிச்சர்ட் அட்டன்பரோ.

வயோதிகம் காரணமாக ரிச்சர்ட் அட்டன்பரோ சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் என்றும் திடீரென ஞாயிறு அன்று மரணமடைந்தார் என்றும் அவரது மகன் மைக்கேல் அட்டன்பரோ பிபிசியிம் தெரிவித்தார்.

உயரத்தில் சிறியதாகவும் ஆளுமையில் சுறுசுறுப்பான தோற்றமும் கொண்ட அட்டன்பரோ, தனது முதுமை காலத்திலும் இளமையான எண்ணங்களை தனது திரைப்படங்களின் மூலம் வெளிப்படுத்தினார். இதனால் அனைவரும் அவரை செல்லமாக 'டிக்கி' என்றழைத்தனர்.

11 படங்களை இயக்கியுள்ள ரிச்சர்ட் அட்டன்பரோ, 'த கிரேட் எஸ்கேப்', 'ஜுராசிக் பார்க்' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையால் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார். 13 படங்களைத் தயாரித்தும் உள்ளார்.

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மபூஷண்' உள்ளிட்ட பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றவர் ஆவார். பிரிட்டன் அரசால் லார்ட் அங்கீகாரமும் பெறப்பட்டார்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு மனிதநேய நோக்கங்களை பரப்பும் நல்லெண்ணத் தூதராகவும் செயல்புரிந்துள்ளார்.

கடந்த 2008-ஆம் ஆண்டு வீட்டில் தவறி விழுந்ததால் அட்டன்பரோவின் உடல்நலம் பாதிக்கப்பட்டு, படுக்கையிலேயே இருக்கும்படியான நிலை ஏற்பட்டது. தனது மனைவி ஷீலா சிம்மு மறதி நோய் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவருடன் அட்டன்பரோவும் தனது முதுமை காலத்தை பகிர்ந்து கொண்டார்.

பின்னர் அட்டன்பரோவும் தனது 89 வயதில் மனைவிக்கு ஏற்பட்ட அதே மறதி நோயால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தார்.

அட்டன்பாரோவின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இறங்கல் தெரிவித்துள்ளனர். அட்டன்பரோ, 'திரையுலகனின் புகழ்' என்று கூறியுள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், 'பிராட்டான் ராக்'- கில் அட்டன்பரோவின் நடிப்பும் 'காந்தி' படத்தில் அவரது இயக்கும் கலையும் அசாதாரணமானது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x