Published : 11 Nov 2018 08:32 AM
Last Updated : 11 Nov 2018 08:32 AM

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எச்சரிக்கை மணி

அனல் பறக்கும் பிரச்சாரம், இனவெறியைத் தூண்டும் விஷம பேச்சு, அகதிகள் பிரச்சினையை பூதாகரமாக்குவது ஆகியவற்றால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இப்போது புரிந்து கொண்டிருப்பார்.

சட்டவிரோத குடியேறிகளால், அமெரிக்காவில் பலாத்காரங்கள் அதிகரித்து வருகிறது என்று ட்ரம்ப் பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகிறார். ஆனால் அவரின் அச்சுறுத்தல் பாணி பிரச்சாரம் மக்களிடம் எடுபடவில்லை என்பதை கடந்த 6-ம் தேதி இடைக்கால தேர்தல் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. அதிபர் ட்ரம்புக்கு ஒரே ஓர் ஆறுதல்.

செனட் அவையில் ஆளும் குடியரசு கட்சி தட்டுத் தடுமாறி பெரும்பான்மையை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் பிரதிநிதிகள் அவையில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி மிக எளிதாக பெரும்பான்மையை எட்டியுள்ளது. பல்வேறு மாகாணங்களின் ஆளுநர் பதவியையும் எதிர்க்கட்சி கைப்பற்றியுள்ளது. இடைக்கால தேர்தல் முடிவுகள் அதிபர் ட்ரம்புக்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணியாகும்.

வெற்றுப் பிரச்சாரங்கள், மலிவான கோஷங்கள் அடிப்படைவாதிகளை மட்டுமே மகிழ்விக்கும் என்பதை அவர் உணர வேண்டும். இனவெறியைத் தூண்டும் பேச்சுகளால் நாட்டில் வன்முறைகள் மட்டுமே அதிகரிக்கும். அண்மையில் பிட்ஸ்பர்க் நகரில் 11 பேர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டது இதற்கு உதாரணம். அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டைவிட 2017-ம் ஆண்டில் 12 சதவீதம் அளவுக்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதற்கெல்லாம் அதிபர் ட்ரம்ப்தான் காரணம் என்று குற்றம் சாட்ட முடியாது.

ஆனால் அவரது நடவடிக்கைகள், செயல்பாடுகள் அடிப்படைவாதிகளைத் தூண்டி விடுகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது. ட்ரம்பின் 2 ஆண்டு கால ஆட்சியை மதிப்பிட்டே இடைக்கால தேர்தலில் மக்கள் வாக்களித்துள்ளனர். தேர்தல் முடிவுகளில் அவர் நிச்சயம் பெருமிதம் கொள்ள முடியாது. கடந்த 2017 ஜனவரியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இதுவரை என்னென்ன சாதித்தோம் என்று ட்ரம்ப் சீர்தூக்கி பார்த்திருந்தால் தேர்தல் முடிவுகள் நிச்சயம் வேறுமாதிரியாக இருந்திருக்கக்கூடும்.

அமெரிக்க பொருளாதாரம் மேம்பட்டிருக்கிறது. வேலைவாய்ப்பு பெருகியிருக்கிறது. வரி சீர்திருத்தங்கள் திருப்தி அளிக்கிறது. புதிதாக போரில் ஈடுபடாததால் அமெரிக்க வீரர்களின் உயிரிழப்பு குறைந்திருக்கிறது. இந்த சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க ட்ரம்ப் தவறிவிட்டார்.

அமெரிக்காவில் தஞ்சமடைய மெக்ஸிகோ வழியாக எல்லை நோக்கி வரும் அகதிகளை குறிவைத்தே ட்ரம்ப் பிரச்சாரம் செய்தார். நாட்டின் பாதுகாப்புக்கு அவர்கள் மிகப்பெரிய அச்சுறுத்தல் என மேடைதோறும் முழங்கினார்.

ஆனால் அவரது பிரச்சாரத்தை மக்கள் விரும்பவில்லை. பிரதிநிதிகள் அவையில் பெற்ற வெற்றியை ஜனநாயக கட்சித் தலைவர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த பெரும்பான்மையை பயன்படுத்தி முக்கிய மசோதாக்களை அவர்கள் தடுத்து நிறுத்தினால் அது தற்கொலைக்கு சமமாகிவிடும். அதிபருக்கு எதிரான விசாரணைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று சில ஜனநாயக கட்சித் தலைவர்கள் விரும்புகின்றனர்.

ஆனால் இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி 2020 அதிபர் தேர்தலில் அனுதாப அலை மூலம் ட்ரம்ப் வெற்றி வாகை சூடும் வாய்ப்பு உள்ளது என்பதை எதிர்க்கட்சி மறந்துவிடக்கூடாது. அமெரிக்காவின் நலனுக்கு எதிரான கொள்கைகள், மசோதாக்களை மட்டுமே ஜனநாயக கட்சி எதிர்க்க வேண்டும். இது அந்த கட்சிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் நன்மை பயக்கும்.

-டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி,

எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட்டெக்னாலஜி கல்லூரியின் பேராசிரியர்வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x