Published : 11 Oct 2018 04:34 PM
Last Updated : 11 Oct 2018 04:34 PM
#மீ டூ மூலம் பாலியல் புகார் கூறுபவர்கள் வலுவான ஆதாரத்தை வைத்திருக்க வேண்டும் என்று மெலானியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பணியிடங்களில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த பெண்கள், சமூக வலைதளங்களில் #மீ டூ இயக்கத்தின் மூலம் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறிவருகின்றனர். திரையுல பிரபலங்கள் தொடங்கி, பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் #மீ டூ இயக்கம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார் மெலானியா.
ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மெலானியா, கடந்த வாரம் கென்யாவில் ஏபிசி செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ''மீ டூ இயக்கப் பெண்களை நான் ஆதரிக்கிறேன். அவர்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும். அவர்களை நாம் அரவணைக்க வேண்டும்.
அதே நேரத்தில் புகார் கூறும் பெண்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரத்தை வைத்திருக்க வேண்டும்.
நீங்கள் வெறுமனே, 'நான் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டேன்', 'அவர் அதைச் செய்துவிட்டார்' என்று கூறக்கூடாது. ஏனெனில் ஊடகங்கள் சில நேரங்களில் சில சம்பவங்களை அவர்களுக்கு ஏற்றவாறு சித்தரித்துவிடுவர். அது சரியல்ல'' என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபரும், மெலானியாவின் கணவருமான டொனால்ட் ட்ரம்ப், ஏராளமான பாலியல் புகார்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT