Last Updated : 22 Oct, 2018 01:48 PM

 

Published : 22 Oct 2018 01:48 PM
Last Updated : 22 Oct 2018 01:48 PM

ஓராண்டு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது: வெள்ளத்தில் மூழ்கியது கத்தார்

கத்தாரில் ஓராண்டு பெய்ய வேண்டிய மழையின் அளவு கடந்த சனிக்கிழமையன்று, ஒரேநாளில் கொட்டித் தீர்த்தது. இதனால், தலைநகர் தோஹா உள்ளிட்ட பல்வேறு நகரங்களை வெள்ளம் சூழ்ந்தது.

பாலைவன நாடான கத்தாரில் சனிக்கிழமையன்று திடீரென்று காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தொடர்ச்சியாக கனமழையால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, சுரங்கப்பாதைகளில் வெள்ள நீர் தேங்கியது, வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது, விமானப் போக்குவரத்தும்கூட பாதிக்கப்பட்டது.

கத்தார் மக்கள் இதுபோன்ற மழையை இதற்கு முன் பார்த்தது இல்லை, திடீரென பெய்த மழை இந்த அளவுக்குப் பெருமழையாக ஒரேநாளில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

தலைநகர் தோஹாவில் பெரும்பாலான சாலைகளில் வெள்ள நீர் ஆறாகப் பாய்ந்தது. இதனால், சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் மூழ்கின. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால், வீடுகளுக்குள் நீர் புகுந்தது.

அல்ஜசிரா சேனலின் மழை குறித்த சிறப்பு நிருபர் கூறுகையில், ''தலைநகர் தோஹாவில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, கடந்த சனிக்கிழமை ஒரேநாளில் பெய்திருக்கிறது. தோஹாவின் புறநகர் பகுதியான அபு ஹாமரில் மட்டும் 61 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது. தோஹாவில் ஆண்டு சராசரி மழையே 77 மி.மீ. மழைதான். ஏறக்குறைய ஒரு ஆண்டு பெய்ய வேண்டிய மழையின் பெரும்பகுதி ஒரேநாளில் கொட்டித் தீர்த்தது'' எனத் தெரிவித்தார்.

தோஹாவில் பெய்த கனமழையால் கத்தார் ஏர்வேஸ் உள்ளிட்ட பல்வேறு பயணிகள் விமானங்கள், சரக்கு விமானங்கள் அண்டை நாடான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன.

மேலும் சில விமானங்கள் குவைத் நாட்டுக்கும், ஈரான் நாட்டுக்கும் திருப்பி அனுப்பிவிடப்பட்டு காலநிலை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், சனிக்கிழமை முதல் நேற்றுவரை தோஹாவில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும், சுரங்கப்பாதைகள், தாழ்வான சாலைகளில் கார்களைக் கொண்டு செல்ல வேண்டாம் என்று கத்தார் பொதுப்பணித்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படங்களில் தோஹா நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியதையும், கார்கள் தண்ணீரில் மிதப்பதையும், வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்ததையும் காண முடிந்தது.

கத்தாரின் மிகப்பெரிய தேசிய நூலகம் மழை காரணமாக வேறு வழியின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு, திங்கள்கிழமைதான் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திடீர் மழை, வெள்ளத்தையும் பார்த்த அமெரிக்கத் தூதரகம் ஞாயிற்றுக்கிழமை தூதரத்துக்கு விடுமுறை விடப்பட்டது.

கத்தாரில் கனமழை திங்கள்கிழமை வரை தொடர வாய்ப்புள்ளதால், மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், தாழ்வான பகுதிகள், சுரங்கப் பாதைகளில் மழை பெய்த பின் செல்ல வேண்டாம் என்றும் கத்தார் பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x