Last Updated : 26 Oct, 2018 07:37 PM

 

Published : 26 Oct 2018 07:37 PM
Last Updated : 26 Oct 2018 07:37 PM

விமானம் வாங்க முடியவில்லையே...: சொந்தமாக விமானத்தையே தயாரித்து சீன விவசாயி அசத்தல்

சீனாவின் பூண்டு விவசாயி ஒருவர் விமானம் வாங்க வேண்டும் என்ற தன் கனவை தனக்கு ஒரு சொந்த விமானத்தையே தயாரிப்பதன் மூலம் தீர்த்துக் கொண்டு அசத்தியுள்ளார்.

வடகிழக்கு சீனாவில் பூண்டு விவசாயம் செய்து வருபவர் ஸூ யுவே. இவர் ஏர்பஸ் 320 போலவே அப்படியே அச்சி அசலாக ஒரு விமானத்தைத் தயாரித்துள்ளார்.

இவர் பள்ளிப்படிப்பையே முடிக்காதவர், முதலில் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை பயிர் செய்து வந்தார், பிறகு கையுவான் என்ற சிறு ஊரில் தொழிற்சாலை ஒன்றில் வெல்டிங் தொழில் பார்த்து வந்தார்.

 

இவருக்கு விமானத்தில் பயணிக்க வேண்டும், அதுவும் சொந்த விமானம் வேண்டும் என்பது ஒரு கனவாகவே மாறியிருந்தது. “எனக்கும் நடுத்தர வயது வந்துவிட்டது. நான் விமானம் வாங்க முடியாது, ஆனால் ஒன்றைத் தயாரிக்க முடியும் என்று நம்பினேன்” என்று ஏ.எஃப்.பி.செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய சேமிப்புத் தொகையான 2.6 மில்லியன் யுவான், அதாவது 3,74,000 டாலர்களை தன் விமானத் தயாரிப்புத் திட்டத்தில் முதலீடு செய்தார். இதற்காக ஆன் லைன் புகைப்படங்களைச் சேகரித்து ஆராய்ச்சி செய்தார். ஏகப்பட்ட தவறுகளுடன் விமானக் கட்டுமானச் சட்டம், காக்பிட், இறக்கைகள், எஞ்ஜின்கள், பின் பகுதி என்று 60 டன்கள் ஸ்டீலை இதில் ஈடுபடுத்தினார்.

இவருக்கு இவரது கனவைப் பகிர்ந்து கொண்ட 5 பேர் இதில் உதவி புரிந்தனர். வீட்டிலேயே தயாரித்த ஏர்பஸ் உருவானது. ஆனால் இந்த விமானம் உடனடியாக பறப்பதற்கு பயன்படுத்தப்படாது என்று கூறும் ஸூ யுவே, இதனை உணவருந்தும் இடமாக மாற்ற முடிவு செய்துள்ளார். “விமானத்துக்கு செல்ல சிகப்பு கம்பளம் விரிப்போம், ஆகவே சாப்பிட வருவோர் ஒவ்வொருவரும் தங்களை அதிபர் போல் உணர வேண்டும்” என்கிறார் ஸூ யுவே. 36 முதல் வகுப்பு இருக்கைகள் வாடிக்கையாளர்களுக்காக விமானத்தில் தயாராக உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x