Published : 13 Oct 2018 08:18 AM
Last Updated : 13 Oct 2018 08:18 AM
அரேபிய தீபகற்பத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது கத்தார். அதனுடைய நில எல்லையாக இருப்பது சவுதி அரேபியா. கடலைத் தாண்டினால் எதிர்ப்புறத்தில் ஈரான் இருக்கிறது. மூன்று புறமும் கடலால் சூழப்பட்டிருக்கும் தீபகற்ப நாடான கத்தார், பிரிட்டனின் ஆளுகையில் இருந்து கடந்த 1971-ல் சுதந்திரம் பெற்றது. சிறிய நாடு என்றாலும் மிகவும் பணக்கார நாடு. தனிநபர் வருமானம் உச்சத்தில் இருக்கிறது. காரணம், இங்கு வற்றாது சுரக்கும் பெட்ரோலியக் கிணறுகள்தான். இந்த நாட்டுக்கு இப்போது ஒரு பெரிய பிரச்சினை உருவாகியுள்ளது. தீபகற்பமாக இருக்கும் இது, தீவு நாடாக மாறும் நிலை தோன்றும் வாய்ப்பு உண்டாகி இருக்கிறது!
ஏதாவது இயற்கைப் பேரிடர் வரப்போகிறதா? இல்லை. இது செயற்கைப் பேரிடர். சவுதி அரேபிய அரசு ஒரு பெரிய கால்வாயைத் தோண்ட திட்டமிட்டிருக்கிறது. இது செயல்படுத்தப்படும்போது கத்தார் ஒரு தீவு ஆகிவிடும். இதற்கு ‘சல்வா கால்வாய்த் தீவு திட்டம்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே சவுதி அரசுக்கும், கத்தாருக்கும் உள்ள தீவிர உரசல்கள்தான் இப்போது கால்வாய்த் திட்டமாக வெளிப்பட்டிருக்கிறது.
கத்தாருக்கும் சவுதிக்கும் இடையேயான 37 மைல் எல்லைக்கு இந்தக் கால்வாய் விரியும். இந்தக் கால்வாயின் அகலம் 650 அடி. இந்தக் கால்வாயின் மூலம் அதிக கப்பல்களால் பயணிக்க முடிந்து சவுதியின் சுற்றுலா வருமானம் அதிகரிக்கும் என்று சிலர் கூற, தனது அணு ஆயுதக் கழிவுகளை முடிந்தவரை கத்தாருக்கு அருகில் கொட்ட சவுதி திட்டமிடுகிறது என்கிறார்கள் சிலர்.
ஜூன் 2017-ல் கத்தாருடனான தனது தூதரக உறவை சவுதி அரேபியா துண்டித்துக் கொண்டது. என்ன காரணம்? தீவிரவாதிகளுக்கு கத்தார் ஆதரவு அளிக்கிறது என்பதுதான் வெளிப்படையாகக் கூறப்பட்ட காரணம். அதில் உண்மை உண்டுதான். முக்கியமாக, தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்யும் பலரையும் கத்தார் தனது எல்லைக்குள் சுதந்திரமாக அனுமதிக்கிறது. பாலஸ்தீன அணியை ஆதரிக்கும் ‘ஹமாஸ்’ என்ற தீவிரவாத இயக்கத்தை கத்தார் ஆதரிக்கிறது.
ஆனால், தீவிரவாதிகளைத் தங்க விடு வது, தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்வது என்ற குற்றச்சாட்டை எதிர் தரப்பு நாடுகளின் மீதும் சுமத்த முடியும். உலக மகா தீவிர அமைப்புகளில் ஒன்றான ஐ.எஸ். அமைப் புக்கு பல அரேபிய நாடுகள் நிதியுதவி செய்கின்றன என்பது தெரிந்ததுதான். பின் பகைமைக்கு என்னதான் காரணம்? ஈரானின் நண்பனாக கத்தார் இருக்கிறது என்பதுதான் முக்கிய காரணம்.
‘முஸ்லிம் ப்ரதர்ஹுட்’ என்ற அரசியல் இயக்கம் தனது குடும்ப வாரிசு ஆட்சிக்கு எதிரானது என்று கருதுவதால் சவுதி அரேபியா இந்த அமைப்பைக் கிள்ளி எறியத் துடிக்கிறது. எகிப்தின் பிரதமர் முகம்மது மோர்ஸி என்பவரும் இந்த அமைப்பின் உறுப்பினர். அவரை, கத்தார் ஆதரிப்பது சவுதிக்குப் பிடிக்கவில்லை. நாளடைவில் தங்கள் நாட்டிலுள்ள முஸ்லிம் ப்ரதர்ஹுட் அமைப்பினரில் கணிசமானவர்களைக் கத்தார் வெளியேற்றிய பிறகுதான் சவுதி அமைதி அடைந்தது.
தாலிபனோடும், அல் காய்தாவுடனும் கத்தார் கொண்டுள்ள நல்லுறவு பிற அரேபிய நாடுகளுக்குப் பிடிக்கவில்லை. கத்தார் நாட்டின் தேசிய தொலைக்காட்சி சானலுக்கு பெயர் அல் ஜசீரா. அது ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்பவர்களை ஆதரிக்கிறது. ஏமன் அரசை சவுதி அரேபிய அரசு ஆதரிக்கிறது. சவுதி கூறும் குற்றச்சாட்டுகளைக் கத்தார் மறுக்கிறது. எனினும் சவுதியின் குற்றச்சாட்டுகளுக்குப் பல ஆதாரங்கள் புலப்படுகின்றன.
இந்தக் கால்வாய் திட்டத்தை இப்போது முன்னெடுக்கப் போவதில்லை என்று தற்போது அறிவித்திருக்கிறது சவுதி அரேபியா. எனினும் இது கத்தாரின் தலையில் எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தியாகத்தான் இருக்கப் போகிறது. ஒரு நாட்டை பொருளாதாரத் தடைகள், அரசியல் ரீதியான அணுகுமுறை போன்றவற்றின் மூலம்தான் இதுவரை தனிமைப்படுத்திப் பார்த்ததுண்டு. ஒரு கால்வாயின் மூலம் ஒரு நாட்டைப் புவியியல் ரீதியாக தனிமைப்படுத்துவது என்பது வித்தியாசமான ‘வேற லெவல்’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT