Published : 04 Aug 2014 03:03 PM
Last Updated : 04 Aug 2014 03:03 PM

காஸாவில் போர் நிறுத்தம் இடையே இஸ்ரேல் கடும் தாக்குதல்: ஜிகாத் கமாண்டர் பலி

காஸா மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலில், ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கு மிகவும் நெருக்கமான தி இஸ்லாமிக் ஜிகாத் குழுவின் முக்கிய கமாண்டர் டானியல் மன்சூர் கொல்லப்பட்டார்.

இந்தத் தாக்குதல், இஸ்ரேல் அறிவித்த 7 மணி நேர போர் நிறுத்தத்தின் இடையே நடத்தப்பட்டது சற்றும் எதிர்பாராதவிதமாக இருந்தது.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,650-க்கும் மேலாக அதிகரித்துள்ளது.

இந்தத் தாக்குதலால் கடந்த நான்கு வார காலமாக, பாலஸ்தீன மக்கள் தங்களது உடைமைகள் அனைத்தையும் இழந்து உள்நாட்டிலேயே பல்வேறு பகுதிகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

கமாண்டர் பலி

இந்த நிலையில், 7 மணி நேர மனித நேய அடிப்படையிலான தற்காலிக போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் எனவும், தெற்கு காஸாவின் கான் யூனிஸ் நகரின் அருகே உள்ள அபஸன் அல் கபிரா, அபஸன் அல் சகிரா கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த இடைப்பட்ட நேரத்தில் தங்களின் வீடுகளுக்கு திரும்பலாம் எனவும் இஸ்ரேல் அறிவித்தது.

இதற்கிடையே, ஹமாஸ் இயக்கத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய தி இஸ்லாமிக் ஜிஹாத் என்ற கிளர்ச்சிக் குழுவின் கமாண்டர் டானியல் மன்சூர் என்பவர் வீட்டின் மீது இன்று காலை இஸ்ரேல் படைகள் ஏவுகணையை வீசி நடத்திய தாக்குதலில், அவர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காஸாவின் எல்லை ஒட்டிய பகுதியில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினரின் சுரங்க பாதைகளையும் தாக்குவதற்கு இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது.

பள்ளி மீது தாக்குதல்

முன்னதாக நேற்று காஸாவின் தெற்கு பகுதியில் உள்ள ரபாவில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த ஐ.நா. பள்ளி வளாகம் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.

பொது மக்கள் உணவு பெறுவதற்காக, வரிசையில் நின்று கொண்டிருந்த போது இந்த குண்டு வீச்சு சம்பவம் நடந்ததாக ஐ.நா. கூறியுள்ளது.

பள்ளி மீது இஸ்ரேல் குண்டு வீசியதற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த செயலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கடுமையாக எச்சரித்தார்.

மேலும் உலக நாடுகள் பலவற்றின் கண்டனத்தை தொடர்ந்து, காஸா பகுதியில் இருந்து பெருமளவிலான தரைப்படைகளை இஸ்ரேல் நேற்று வாபஸ் பெற்றது.

இதைத் தொடர்ந்து 27ஆவது நாளாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 9 ஆயிரத்தை எட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x