Published : 20 Aug 2014 07:15 PM
Last Updated : 20 Aug 2014 07:15 PM
குழந்தைகளுடன் உணவு நேரத்தைப் பகிரும் பெற்றோரா நீங்கள்..? உங்களுக்கு நீங்களே சபாஷ் சொல்லிக்கொள்ளுங்கள் என்கிறது ஓர் ஆய்வு.
வீட்டில் அதிக நேரத்தை செலவிடுவது, முக்கியமாக காலை மற்றும் இரவு நேரங்களில் குழந்தைகளுடன் இணைந்து சாப்பிடும் பழக்கம், அவர்களின் உணவுப் பழக்கத்தை மேம்படுத்தும் என்று புதிய ஆய்வு ஒன்று பரிந்துரைக்கிறது.
நியூயார்க்கில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், வீட்டில் உணவு நேரத்தின்போது, குழந்தைகளுடன் பெற்றோர் அமர்ந்து தங்களது நேரத்தை பகிர்ந்துகொள்வதால், குழந்தைகளிடையே துரித உணவுகளின் மீதான ஆர்வம் குறைவதாக தெரிய வந்துள்ளது.
இதனால், பெற்றோர்கள் தங்களது நேரத்தை குழந்தைகளுக்காக செலவிடுவதை, குழந்தைகள் உணர்வதற்கு வாய்ப்பாகவும் அமையும். குடும்பத்தினர் அனைவரும், ஒரே நேரத்தில் உணவு உட்கொள்வதால், தன்னை மறந்து அதிக உணவு சாப்பிடும் பழக்கத்தில் மாற்றம் உண்டாகும் என்கிறார் ஆய்வாளர் மொலி மார்டின்.
மேலும், "குழந்தைகள் தனிமைப்படுத்தப்படுவதனால், அவர்களுக்கு துரித உணவுகளின் மீது ஆர்வம் ஏற்படுகிறது. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சரியான நேரத்தில் உணவு உட்கொள்வதால், மற்ற நேரங்களில் துரித உணவு மீது ஆர்வம் போகாது. இதனால் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்களின் உடல் எடைக் கூடுவதை தவிர்த்திடலாம்.
முக்கியமாக உணவு நேரத்தின்போது, குழந்தைகளுடன் தந்தை இருப்பது மிகவும் சிறந்தது. நாங்கள் 16,991 இளம் பருவத்தினரிடையே மேற்கொண்ட ஆய்வில் இதனை கண்டறிந்துள்ளோம்.
தந்தை இருக்கும்போதுதான், குழந்தைகள் தங்களது வீட்டில் உள்ள பழங்களை சாப்பிடுகின்றனர்" என்றார்.
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் இந்த ஆய்வு முடிவு, சமீபத்தில் அமெரிக்க சமூகவியல் சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தில் பகிரப்பட்டு, மிகுந்த வரவேற்பையும் பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT