Published : 14 Aug 2018 11:39 AM
Last Updated : 14 Aug 2018 11:39 AM
அமெரிக்காவுடன் நாங்கள் போரில் ஈடுபட போவதுமில்லை, அவர்களுக்கு நிபந்தனையும் விதிக்க போவதில்லை என ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.
ஈரானில் நிலவும் மக்கள் போராட்டம் மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்புள்ளதா என்பன குறித்து அந்நாட்டுத் தலைவர் அயதுல்லா கருத்து தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "பொருளாதாரத் தடைகளைவிட போரை பற்றியும், நிபந்தனைகளை பற்றியும் நிறைய பேசப்படுகிறது. அவர்களுக்கு ஒருசில வார்த்தைகளை கூற விரும்புகிறேன். அமெரிக்காவுடன் போரும் இல்லை, அவர்களுடன் நிபந்தனைகளும் இல்லை.
ஈரானில் நாள்தோறும் நடைபெறும் வாழ்வாதாரப் பிரச்சனைகள் வெளியிலிருந்து வரவில்லை. அவை உள்நாட்டினரால் உண்டாகிறது. பொருளாதார தடைகளினால் எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் அதை நாம் எப்படி கையாளப்போகிறோம் என்பது மிக முக்கியம்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவித் ஜாரிப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் டிரம்ப் கடந்த வாரம் கையெழுத்திட்டார். மேலும் ட்விட்டரில், ‘‘இது நவம்பர் மாதம் அடுத்தகட்ட நிலையை அடையும். யாராவது ஈரானுடன் வர்த்தகம் செய்ய விரும்பினால் அவர்கள் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம். நான் உலகத்தின் அமைதிக்காகவே இதைக் கேட்கிறேன். வேறு எதுவும் இல்லை’’ என்று பதிவிட்டுருந்தார்.
கடந்த 2015-ம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. இதைத் தொடர்ந்து ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT