Last Updated : 31 Jul, 2018 04:42 PM

 

Published : 31 Jul 2018 04:42 PM
Last Updated : 31 Jul 2018 04:42 PM

சீனாவிடமிருந்து வாங்கிய கடன்களை அடைக்க ஐ.எம்.எப். நிதியைப் பாகிஸ்தான் பயன்படுத்தக் கூடாது: அமெரிக்கா எச்சரிக்கை; புதிய பிரதமர் இம்ரானுக்குக் கடும் சவால்

பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் எதிர்கால ஐஎம்எப் நிதியை அந்நாடு தனது சீனாக் கடன்களை அடைக்கப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க அமைச்சர் மைக் பாம்பியோ பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சி.என்.பி.சி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த மைக் பாம்பியோ, பாகிஸ்தானின் புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ள இம்ரான் கானுடன் இது குறித்து பேசவுள்ளதாகவும், ஐ.எம்.எப் அளிக்கும் நிதியை எக்காரணத்தைக் கொண்டு தங்களது சீனக் கடன்களைத் தீர்க்க பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

“தவறு செய்து விட வேண்டாம். ஐ.எம்.எஃப். என்ன செய்கிறது என்பதை நாங்கள் கண்காணித்து வருவோம். ஐ.எம்.எஃப் வரி டாலர்களையோ அதுனுடன் தொடர்புடைய அமெரிக்க டாலர்களையோ சீனாவுக்கோ சீனாவிடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தவோ பாகிஸ்தான் பயன்படுத்தக் கூடாது.

ஐ.எம்.எஃப்-இடம் 12 பில்லியன் டாலர்கள் நிதி கேட்குமாறு மூத்த பாகிஸ்தான் நிதித்துறை அதிகாரிகள் இம்ரானுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

ஆனால் பன்னாட்டு நிதியத்தின் பெண் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “இதுவரை பாகிஸ்தானிடமிருந்து நிதி கோரி எந்த ஒரு கோரிக்கையும் வரவில்லை என்பதை உறுதி செய்கிறோம். இது தொடர்பாக அதிகாரிகளுடன் எந்த ஒரு ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை” என்றார்.

பாகிஸ்தானில் தற்போது இருந்து வரும் பண நெருக்கடி இம்ரானின் புதிய ஆட்சிக்கு ஏகப்பட்ட சவால்களை அளிக்கவுள்ளது. இதற்காக ஐ.எம்.எஃப்.. கடனை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் பாகிஸ்தானின் வர்த்தகத் தலைவர்கள்.

பாகிஸ்தான் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக சீனா மற்றும் அதன் வங்கிகளிடமிருந்து சுமார் 5 பில்லியன் டாலர்கள் கடன் பெற்றுள்ளது. இந்நிலையில் அன்னியச்செலாவணியின் வறண்டு வருவதால் இன்னொரு 1 பில்லியன் டாலர்கள் கடன்களை சீனாவிடம் கேட்டுள்ளது.

பாகிஸ்தான் - சீனா பொருளாதாரப் பாதைக்காக சீனா ஏகப்பட்ட பணத்தை வாரி இறைக்கிறது, இதனால் அளிக்கப்படும் கடன்களால் பாகிஸ்தானின் நடப்புக் கணக்கில் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.

1980 முதல் ஐ.எம்.எஃப் நிதித் திட்டத்தில் 14 முறை கடன் பெற்றுள்ளது. கடைசியாக 2013-ல் 6.7 பில்லியன் டாலர்கள் கடன் பெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x