Last Updated : 11 Jul, 2018 08:09 AM

 

Published : 11 Jul 2018 08:09 AM
Last Updated : 11 Jul 2018 08:09 AM

காஷ்மீரில் மனித உரிமை மீறப்பட்டதாக குற்றச்சாட்டு: ஐ.நா. அறிக்கை தயாரிப்பில் எங்களுக்கும் பங்கு- கனடா வாழ் பாகிஸ்தானியர் ஒப்புதல்

மிஸ்ஸிஸ்சாகா (கனடா)

ஜம்மு காஷ்மீர் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைவர் தயாரித்த சர்ச்சைக்குரிய அறிக்கையில் தனக்கும் பங்கு இருப்பதாக கனடாவில் வசிக்கும் பாகிஸ்தானியர் ஒருவர் கூறியுள்ளார்.

காஷ்மீர் தொடர்பான முதல் மனித உரிமைகள் அறிக்கையை ஐ.நா. கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியிட்டது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் இரு பகுதிகளிலும் பாதுகாப்பு படையினர் கடும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மனித உரிமை செயற்பாட்டாளர்களை ஒடுக்க பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை பயன்படுத்துவதை பாகிஸ்தான் நிறுத்தவேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. மேலும் காஷ்மீரிகள் மீது அதிக படை பலத்தை இந்தியா பிரயோகிப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

ஐ.நா.வின் இந்த அறிக்கையை இந்தியா நிராகரித்தது. மேலும் இந்த அறிக்கை தவறான எண்ணம் கொண்டது, ஒரு சார்புடையது, உள் நோக்கம் கொண்டது என இந்தியா கூறியது.

இந்நிலையில் இந்த அறிக்கையை ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைவர் செயித் அல் ஹுசைன் தயாரிக்கும்போது தன்னிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாக ரொடன்டோவை சேர்ந்த ஜாபர் பங்காஷ் என்பவர் கூறியுள்ளார். பாகிஸ்தானியரான இவர், இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் பத்திரிகையாளராகவும் யோர்க் பகுதி மசூதி ஒன்றின் இமாம் ஆகவும் பணியாற்றி வருகிறார்.

கனடாவின் மிஸ்ஸிஸ்சாகா நகரில் காஷ்மீர் தொடர்பான மாநாடு ஒன்றில் ஜாபர் பங்காஷ் பேசும்போது, “காஷ்மீர் தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டதில் காஷ்மீர் நண்பர்களான நமக்கும் பங்கு இருந்ததை பணிவுடனும் மிகுந்த பெருமையுடனும் தெரிவித்துக்கொள்கிறேன். ஐ,நா. மனித உரிமை கவுன்சில் தலைவருடன் எனக்கு தனிப்பட்ட தொடர்பு இருந்தது.

இமெயிலில் நான் அவருக்கு அனுப்பிய கடிதத்துக்கு அவர் பதில் அளித்திருந்தார். அதில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் இரு பகுதிகளுக்கும் சென்றுவர தாங்கள் விரும்புவதாகக் கூறினார். இதையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு மனித உரிமை கவுன்சில் தலைவர் மற்றும் அவரது பிரதிநிதிகள் சென்றுவருவது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நபீஸ் ஜகாரியாவிடம் பேசினேன்.

பிறகு பாகிஸ்தானின் சம்மதத்தை மனித உரிமை கவுன்சில் தலைவரிடம் தெரிவித்தேன்” என்றார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் அதிபர் சர்தான் மசூத் கானும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x