Published : 27 Jul 2018 11:12 AM
Last Updated : 27 Jul 2018 11:12 AM
பாகிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்-பக்துன்கவா ஆகிய 4 மாகாண சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ), ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்), முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ மகன் பிலவல் புட்டோ ஜர்தாரி தலைமையிலான பாகிஸ் தான் மக்கள் கட்சி (பிபிபி), மதவாத கட்சிகளை உள்ளடக்கிய முத்தாஹிதா மஜ்லிஸ்-இ-அமால் (எம்எம்ஏ) கூட்டணி, அவாமி தேசிய கட்சி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் போட்டியிட்டன.
இதில், பிடிஐ 86 இடங்களில் வெற்றி பெற்று 34 இடங்களில் முன்னிலை வகித்து 120 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆளும் நவாஸ் கட்சி 43 இடங்களில் வெற்றி பெற்று 18 இடங்களில் முன்னிலை வகித்தது. பிபிபி 18 இடங்களில் வெற்றி பெற்று 22 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. எனினும், தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக தேர்தல் முடிவை வெளியிடவில்லை.
புதிய தலைவர்
எனினும் வேறு சில கட்சிகள் ஆதரவுடன் இமரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்பது உறுதியாகி விட்டது. இதன் மூலம் 30 ஆண்டுளாக கோலோச்சி வந்த நவாஸ் ஷெரீப் மற்றும் புட்டோ குடும்பம் இல்லாத புதிய நபர் தலைமை பொறுப்புக்கு வருகிறார்.
தேர்தலுக்கு முன்பே பாகிஸ்தான் ராணுவ தலைவர் குவாமர் ஜாவேத் பாஜ்வாவை புகழ்ந்து விட்டார் இம்ரான் கான். இதன் மூலம் பதவியேற்ற பின் அவர் எந்த வழியில் பயணிப்பார் என்பதை கோடிட்டு காட்டி விட்டார்.
அரசியலில் தனக்கு எந்த பங்களிப்பும் இல்லை என பாஜ்வா தொடர்ந்து கூறி வந்தாலும், பாகிஸ்தான் நிர்வாகத்தில் அந்த நாட்டு ராணுவத்தின் பங்களிப்பு எந்த அளவில் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். தேர்லை நடத்துவதற்கு கூட பாகிஸ்தான் ராணுவம் எந்த அளவில் உதவி புரிந்தது என்பதையும் அரசியல் நோக்கர்கள் குறிப்பட்டுச் சொல்கின்றனர்.
நவாஸ் ஷெரீப் பதவி பறிக்கப்பட்ட பின்பே, பாகிஸ்தான் அரசியலில் புதிய மாற்றங்கள் ஏற்படலாம் என்பது கணிக்கப்பட்ட ஒன்று தான், வாரிசு அரசியல், ஊழல், மோசமான நிர்வாகம் போன்ற காரணங்களால் நவாஸ் மற்றும் புட்டோ குடும்பத்தின் மீதான வெறுப்பு மக்களிடம் அதிகரித்து இருந்தது. காஷ்மீர் விவகாரத்தில் தீவிரம் காட்டி வரும் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க தற்போதைய அரசியல்வாதிகளால் முடியாது என்ற முடிவுக்கு தீவிரவாத அமைப்புகள் ஏற்கெனவே வந்து விட்டன.
தீவிரவாத ஆதரவு
இந்த தேர்தலில் பாகிஸ்தானை பொறுத்தவரை இந்தியா என்பது ஒரு பிரச்சினை அல்ல. ஆனால் இந்தியர்களை பொறுத்தவரை பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத குழுக்கள் மிக முக்கியமானவை. இந்திய ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதிய அரசியல்வாதி ஒருவர், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத குழுக்களுக்கு தேவை .
ஹர்கத்துல் முஜாகிதீன் தலைவர் பஸூலூர் ரஹ்மானை, தேர்தலுக்கு முன்பே இம்ரான் கான் கட்சியினர் ஆதரித்து பேசத் தொடங்கினர். இந்திய சிறையில் இருந்த மசூத் அஸா விடுவிப்பதற்காக 1999-ம் ஆண்டு காபூலுக்கு விமானத்தை கடத்தியவர் பஸூலூர் ரஹ்மான்.
இதுபோலவே சன்னிப் பிரிவு தலைவரும் சுன்னத் வால் ஜமாத் தலைவருமான அகமது லுதின்வியின் அமைப்பு தடை செய்யப்பட்டு, பின்னர் அந்த தடை ராணுவத்தின் தலையீட்டால் நீக்கப்பட்டதும் மிக முக்கியமானது.
இதுபோன்ற தலைவர்களின் ஆதரவும் இம்ரான் கானை முன்னிலை படுத்தியது. இதனால் இம்ரான் கானை பொறுத்தவரை அவரது செயல்பாடு, இந்தியா விஷயத்தில் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.
காஷ்மீர் பிரச்சினை
காஷ்மீர் பிரச்சினையை சுமூகமாக, பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க இந்தியா தரப்பில் ஒரு அடி முன்னோக்கி நகர்ந்தால், நாங்கள் இரு அடிகள் முன்னோக்கி வருவோம் என்று பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப்(பிடிஐ) கட்சியின் தலைவரும், பிரதமராகப் பதவி ஏற்க உள்ள இம்ரான் கான் தெரிவித்தார்.
காஷ்மீர் பிரச்சினையை அவர் எழுப்பியுள்ளதன் மூலம் அவர் எநத அளவிற்கு சுதந்திரமாக செயல்பட அங்குள்ள தீவிரவாத அமைப்புகள் அனுமதிக்கும் என்ற கேள்வியும் எழுகிறது. நவாஸ் ஷெரீப் காலத்திலேயே, காஷ்மீர் பிரச்சினையில் இருதரப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
ஆனால் அதனை ஏற்க இந்தியா தயாராக இல்லை. ஒருபுறம் தாக்குதல், மறுபுறம் பேச்சுவாரத்தை என்ற இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. காஷ்மீர் பிரச்சினை, தீவிரவாதிகளின் ஆதிக்கம் என இந்தியா சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளை இம்ரான் கான் எப்படி கையாளப்போகிறார் என்பதை பொறுத்தே இந்தியாவின் அடுத்த நகர்வு இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT