Published : 06 Aug 2014 06:19 PM
Last Updated : 06 Aug 2014 06:19 PM

கொல்லப்பட்டதாகக் கருதிய இஸ்லாமிய பயங்கரவாதி உயிருடன் இருக்கிறார்: பிலிப்பைன்ஸ் ராணுவம்

கொல்லப்பட்டதாகக் கருதப்பட்ட தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கிய பயங்கரவாதி ஒருவர் பிலிப்பைன்ஸில் உயிருடன் நடமாடி வருகிறார் என்று பிலிப்பைன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜுல்கிஃப்லி பின் அப்துல் ஹர் என்ற மலேசியாவைச் சேர்ந்த பயங்கரவாதி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்க ராணுவத்தினர் உதவியுடன் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பலியானதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் உற்சாகமாக அறிவித்திருந்தது.

2007ஆம் ஆண்டு இவரை உயிருடனோ பிணமாகவோ பிடித்து தருபவர்களுக்கு 5 மில்லியன் டாலர்கள் பரிசுத் தொகையை அமெரிக்கா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் கொல்லப்பட்டதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் 2 ஆண்டுகளுக்கு முன்னதாக கர்வத்துடன் அறிவித்தது. ஆனால் அவர் தற்போது தெற்கு பிலிப்பைன்ஸில் உயிருடன் நடமாடி வருவதாக கூறியுள்ளது.

பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவுடன் நெருங்கிய தொடர்புடைய அபு சய்யாஃப் மற்றும் ஜெமா இஸ்லாமியா ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்த் வந்தது. இவர் வெடிகுண்டுகள் தயாரிப்பதில் நிபுணர்.

2012ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் ராணுவம் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் தற்போது உயிருடன் இருக்கும் ஜுல்கிஃப்லி பின் அப்துல் ஹர் என்கிற மர்வான் என்ற இந்த பயங்கரவாதி உட்பட 15 பேர் பலியாகிவிட்டதாகவும் இதனால் தெற்காசிய பயங்கரவாதமே இனி கேள்விக்குள்ளாகிவிடும் என்று பிலிப்பைன்ஸ் முரசறைந்து கொண்டாடியது.

ஆனால் அப்போதே மலேசியா பிலிப்பைன்ஸின் இந்தக் கொண்டாட்டத்தைக் கேலி செய்து, ‘இதனை நம்ப முடியவில்லை’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் அதன் பிறகு ஜுல்கிஃப்லி பின் அப்துல் ஹர் என்கிற மர்வான் உயிருடன் இருப்பதாகவும், பிலிப்பைன்ஸ் தெற்குத் தீவான மிண்டானாவோவில் இவர் உயிருடன் இருப்பதாகவும் ராணுவ உளவுத்துறையினருக்கு தொடர்ந்து தகவல்கள் வந்தவண்ணம் இருந்துள்ளது.

இந்த பயங்கரவாதி ஈடுபட்ட தாக்குதல் பலவாகும். மனிலாவில் பயணிகள் படகு ஒன்றை குண்டு வைத்துத் தகர்த்ததில் 100 பேர் பலியாகினர். அபு சய்யாஃப் அமைப்பு மேற்கொண்டதாக கருதப்படும் கொடூரமான பாலி குண்டு வெடிப்பில் 202 பேர் பலியானது உலகை உலுக்கிய பயங்கரவாத சம்பவமாகும்.

தெற்காசிய பகுதியில் இஸ்லாமிக் ஸ்டேட்-ஐ உருவாக்குவதில் அபு சய்யாஃப் மற்றும் ஜெமா இஸ்லாமியா அமைப்புகள் முனைப்பு காட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x