Published : 09 Apr 2025 06:35 AM
Last Updated : 09 Apr 2025 06:35 AM

அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் 3 லட்சம் இந்திய மாணவர்களை வெளியேற்ற திட்டம்

அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 3 லட்சம் இந்திய மாணவ, மாணவியரை வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் சுமார் 11 லட்சம் வெளிநாட்டு மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 3.31 லட்சம் பேர் இந்திய மாணவ, மாணவியர் ஆவர். சுமார் 2.77 லட்சம் சீன மாணவர்கள். 43,149 தென்கொரிய மாணவர்களும் அமெரிக்காவில் பயில்கின்றனர். கனடா, வியட்நாம், தைவான், சவுதி அரேபியா, பிரேசில், மெக்ஸிகோ நாடுகளை சேர்ந்த மாணவ, மாணவியரும் அமெரிக்காவில் கணிசமாக உள்ளனர்.

அமெரிக்க கல்வி நிறுவனங்களில் சேர அந்த நாட்டு அரசு சார்பில் எப் 1 விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை பெற்று அமெரிக்க கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியர், விருப்ப பயிற்சி திட்டத்தில் (ஓபிடி) இணைந்து அமெரிக்காவில் பணியாற்ற முடியும்.

அதாவது இளங்கலை பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் ஓபிடி திட்டத்தில் ஏதாவது ஓர் அமெரிக்க நிறுவனத்தில் ஓராண்டு வரை பணியாற்றலாம். அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினீயரிங், கணிதம் உள்ளிட்ட துறைகளில் பட்டம் பெற்றவர்கள், அமெரிக்க நிறுவனங்களில் 3 ஆண்டுகள் வரை பணியாற்றலாம்.

ஓபிடி திட்டத்தின் மூலம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான மாணவ, மாணவியர் அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இந்த சூழலில் ஓபிடி திட்டத்தை ரத்து செய்யும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு 'நேர்மையான உயர் திறன் அமெரிக்க சட்டம் 2025’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

புதிய மசோதா குறித்து அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவ, மாணவியர் கூறியதாவது: சுமார் ரூ.1 கோடி வரை செலவு செய்து அமெரிக்காவில் கல்வி பயில்கிறோம். பட்டப்படிப்பை நிறைவு செய்த பிறகு ஓபிடி திட்டத்தில் 3 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். இதன்மூலம் கல்விக்காக செலவு செய்த பெரும் தொகையில் ஓரளவுக்கு ஈடுகட்ட முடியும்.

தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மசோதாவால் ஓபிடி திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படும். அதாவது எந்தவொரு அமெரிக்க நிறுவனமும் வெளிநாட்டு மாணவர்களை பணியில் அமர்த்த முடியாது.

அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பை, வெளிநாட்டினர் பறிப்பதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் கருதுகிறார். இதன்காரணமாக புதிய மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்தியாவை சேர்ந்த சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவி, மாணவியர் அமெரிக்காவில் கல்வி பயின்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.

ஓபிடி திட்டத்தில் அமெரிக்க நிறுவனங்களில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவ, மாணவியர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் வலுக்கட்டாயமாக அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு இந்திய மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை வட்டாரங்கள் கூறியதாவது: ஓபிடி திட்டத்துக்காக அமெரிக்க அரசு சார்பில் பல்வேறு நிறுவனங்களுக்கு மானிய உதவி வழங்கப்படுகிறது. இதன்படி ஓராண்டுக்கு 4 பில்லியன் டாலர் வரை மானிய தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது அமெரிக்க மக்களின் வரிப்பணம். இதை வெளிநாட்டினருக்காக செலவிட முடியாது.

ஓபிடி திட்டத்தால் வெளிநாட்டினருக்கே வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. அமெரிக்க இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி பரிதவிக்கின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண 'நேர்மையான உயர் திறன் அமெரிக்க சட்டம் 2025’ கொண்டு வரப்பட்டு உள்ளது. இது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்படும். இதன்பிறகு ஓபிடி திட்டத்தில் அமெரிக்காவில் பணியாற்றி வரும் வெளிநாட்டினர் அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.

இவ்வாறு அமெரிக்க அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x