Published : 04 Apr 2025 07:30 PM
Last Updated : 04 Apr 2025 07:30 PM

அமெரிக்காவுக்கு 34% இறக்குமதி வரி விதித்து சீனா பதிலடி!

கோப்புப் படம்

பெய்ஜிங்: அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை 34% ஆக உயர்த்தி சீனா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை ஏப்ரல் 2-ம் தேதி அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

அதன்படி, இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 27 சதவீத பரஸ்பர வரியும், சீனாவுக்கு 34 சதவீதம், வங்கதேசம் 37 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீதம், ஜப்பான் 24 சதவீதம், இந்தோனேசியா 32 சதவீதம், பாகிஸ்தான் 29 சதவீதம், தாய்லாந்து 36 சதவீதம் என வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 10 சதவீத அடிப்படை வரி விதிப்பு ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்தும், கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 9-ம் தேதிக்குப் பிறகும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு பல்வேறு நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்தன. இந்நிலையில், ஏப்ரல் 10-ம் தேதி முதல் அனைத்து அமெரிக்க பொருட்களுக்கும் 34% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கான சீனாவின் பதிலடியாக இது அமைந்துள்ளது. சீன வர்த்த அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது.

மேலும், கணினி பாகங்கள், மின்சார வாகன பேட்டரிகள் போன்ற உயர் தொழில்நுட்ப தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அரிய உலோகம் மீது கூடுதல் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாகவும் சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதோடு, அமெரிக்காவின் 27 நிறுவனங்களுக்கு வர்த்தகத் தடை அல்லது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை சீனா விதித்துள்ளது. பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான ஹை பாயின்ட் ஏரோடெக்னாலஜிஸ், போக்குவரத்து மற்றும் தளவாட நிறுவனமான யுனிவர்சல் லாஜிஸ்டிக்ஸ் ஹோல்டிங் ஆகியவை இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இதுமட்டுமின்றி, அமெரிக்காவின் இந்த புதிய வரி விதிப்புக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும் சீனா அறிவித்துள்ளது. “அமெரிக்கா விதித்துள்ள ‘பரஸ்பர வரிகள்’ உலக வர்த்தக அமைப்பின் விதிகளை கடுமையாக மீறுவதாகவும், உலக வணிக அமைப்பின் உறுப்பினர்களின் சட்டப்பூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை கடுமையாக சேதப்படுத்துவதாகவும், விதிகள் சார்ந்த பலதரப்பு வர்த்தக அமைப்பு மற்றும் சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக ஒழுங்கை கடுமையாக குறைமதிப்புக்கு உட்படுத்துவதாகவும் உள்ளது.

இது உலகளாவிய பொருளாதார மற்றும் வர்த்தக ஒழுங்கின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒருதலைப்பட்சமான, கொடுமைப்படுத்தக்கூடிய நடைமுறையாகும். சீனா இதை உறுதியாக எதிர்க்கிறது,” என்று சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x