Published : 30 Mar 2025 05:41 AM
Last Updated : 30 Mar 2025 05:41 AM

நிலநடுக்கத்தால் 1,600 பேர் பரிதாப உயிரிழப்பு: மியான்மர் விரைந்தது இந்திய மீட்பு படை

நேப்பிடா: மியான்மர் நிலநடுக்கத்தில் இதுவரை 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3,500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் (பர்மா) மோனிவா நகருக்கு அருகே நேற்று முன்தினம் காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.7 ஆக பதிவானது. அடுத்த 10 நிமிடங்களில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 6.8 ஆக பதிவானது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. மியான்மர் தலைநகர் நேப்பிடா, சாகைங், மண்டலை, பைகோ, மாகுவே, ஷான் ஆகிய 6 மாகாணங்கள் நிலநடுக்கத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த 6 மாகாணங்களில் அவசர நிலை அமல் செய்யப்பட்டிருக்கிறது.

மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. ராணுவ ஆட்சிக்கு எதிராக அரக்கான் படை என்ற கிளர்ச்சிப் படை ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. தற்போதைய சூழலில் மியான்மரின் 50 சதவீத பகுதிகள் மட்டுமே ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. மீதமுள்ள 50 சதவீத பகுதிகளை அரக்கான் படை நிர்வகித்து வருகிறது. இருதரப்பும் இடையே தீவிரமாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளே நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன. பொதுவாக மியான்மரின் ராணுவ நிர்வாகம், வெளிநாடுகளின் உதவியை கோருவது கிடையாது. நிலநடுக்க பாதிப்பு அளவுக்கு அதிகமாக இருப்பதால் முதல்முறையாக மியான்மர் ராணுவ தலைமை தளபதி மின் ஆங் ஹலாங், சர்வதேச நாடுகளிடம் பகிரங்கமாக உதவி கோரி உள்ளார்.மியான்மர் ராணுவ நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் நிலநடுக்கத்தால் இதுவரை 1,664 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சுமார் 3,408-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோரை காணவில்லை.

'ஆபரேசன் பிரம்மா': மியான்மருக்கு உதவுவதற்காக 'ஆபரேசன் பிரம்மா' என்ற நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதன்படி 15 டன் நிவாரண பொருட்களுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 80 வீரர்கள் சிறப்பு விமானத்தில் மியான்மருக்கு சென்றுள்ளனர்.

இந்திய ராணுவத்தின் சார்பில் மியான்மரில் தற்காலிக மருத்துவமனை தொடங்கப்பட்டு உள்ளது. இந்திய கடற்படையை சேர்ந்த ஐஎன்எஸ் சாவித்ரி கப்பலில் 40 டன் நிவாரண பொருட்கள் மியான்மருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இந்தியாவை சேர்ந்த சுமார் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் தாய்லாந்து, மியான்மருக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.

இந்திய வம்சாவளியினர்: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானோர் மியான்மரில் (பர்மா) குடியேறினர். இதில் 60 சதவீதம் பேர் தமிழர்கள் ஆவர். கடந்த 1948-ம் ஆண்டில் மியான்மர் விடுதலை அடைந்தது. கடந்த 1960-64-ம் ஆண்டுகளில் அப்போதைய ராணுவ ஆட்சியாளர்கள், தமிழர்களுக்கு எதிராக மிகப்பெரிய தாக்குதலை நடத்தினர். அப்போது ஏராளமானோர் இந்தியா திரும்பினர்.

தற்போதைய சூழலில் தமிழர்கள் உட்பட சுமார் 25 லட்சம் இந்தியர்கள் மியான்மரில் வசிக்கின்றனர். அந்த நாட்டின் மக்கள் தொகையில் 5 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். அவர்கள் ரங்கூன், மண்டலை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். மியான்மரின் மண்டலை மாகாணம் நிலநடுக்கத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன்காரணமாக அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினரும் வீடு, உடைமைகளை இழந்திருக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்திலும் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் தலைநகர் பாங்காக்கில் புதிதாக கட்டப்பட்ட 30 மாடி கட்டிடம் இடிந்து நொறுங்கியது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 68 பேர் படுகாயம் அடைந்தனர். 101 பேர் கட்டிடத்தில் சிக்கி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தாய்லாத்தில் பாங்காக் உட்பட 10 பகுதிகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. சுமார் 2,000-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன. தாய்லாந்தில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.

10,000 பேர் இறந்ததாக அச்சம்: மியான்மர் ராணுவ நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் நிலநடுக்கத்தால் இதுவரை 1,644 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 3,500 பேர் படுகாயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகள், மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரை காணவில்லை.

இதற்கிடையே, மியான்மர் சமூக ஆர்வலர்கள் அளித்த தகவல்களின்பேரில் சர்வதேச ஊடகங்கள், நிலநடுக்க பாதிப்பு குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளன.

‘ராணுவ ஆட்சி நடைபெறுவதால் மியான்மர் நாட்டின் நிலநடுக்க பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. எங்களது கணிப்பின்படி, மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்திருக்கக்கூடும். சுமார் 2 கோடிக்கும் மேற்பட்டோருக்கு நிவாரண உதவி தேவைப்படுகிறது.

தற்போது ராணுவ ஆட்சி நடைபெறும் பகுதிகளுக்கு மட்டுமே சர்வதேச மீட்பு படை வீரர்கள் சென்றுள்ளனர். ‘அரக்கான்’ படையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு யாரும் செல்ல முடியாது. அந்த படையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நிலநடுக்க பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை’ என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்திலும் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், தலைநகர் பாங்காக்கில் புதிதாக கட்டப்பட்ட 30 மாடி கட்டிடம் இடிந்து நொறுங்கியது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 68 பேர் படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 101 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x