Published : 29 Mar 2025 08:41 PM
Last Updated : 29 Mar 2025 08:41 PM

மியான்மர் பூகம்ப பலி 1,644 ஆக அதிகரிப்பு: நூற்றுக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பு

மியான்மரில் ஏற்பட்ட பூகம்பத்தில் உருக்குலைந்த கட்டிடங்கள்

மியான்மரில் ஏற்பட்ட பூகம்பத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,644 ஆக அதிகரித்துள்ளது என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. 3,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், கட்டிட இடிபாடுகளில் நூற்றுக்கணக்கானோர் சிக்கித் தவிப்பதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“ராணுவ ஆட்சி நடைபெறுவதால் மியான்மர் நாட்டின் நிலநடுக்க பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. எங்களது கணிப்பின்படி மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்திருக்கக்கூடும்” என்று மியான்மர் சமூக ஆர்வலர்கள் அளித்த தகவல்களின்பேரில் சர்வதேச ஊடகங்கள், நிலநடுக்க பாதிப்பு குறித்த செய்திகளை வெளியிட்டு உள்ளன.

மேலும், “சுமார் 2 கோடிக்கும் மேற்பட்டோருக்கு நிவாரண உதவி தேவைப்படுகிறது. தற்போது ராணுவ ஆட்சி நடைபெறும் பகுதிகளுக்கு மட்டுமே சர்வதேச மீட்புப் படை வீரர்கள் சென்றுள்ளனர். அரக்கான் படையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு யாரும் செல்ல முடியாது. அந்த படையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நிலநடுக்க பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை” என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாதிப்பு எத்தகையது? - இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் (பர்மா) மோனிவா நகருக்கு அருகே வெள்ளிக்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.7 ஆக பதிவானது. அடுத்த 10 நிமிடங்களில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 6.8 ஆக பதிவானது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. மியான்மர் தலைநகர் நேப்பிடா, சாகைங், மண்டலை, பைகோ, மாகுவே, ஷான் ஆகிய 6 மாகாணங்கள் நிலநடுக்கத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

அவசர நிலை: பூகம்பம் தாக்கிய 6 மாகாணங்களில் அவசர நிலை அமல் செய்யப்பட்டிருக்கிறது. மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. ராணுவ ஆட்சிக்கு எதிராக அரக்கான் படை என்ற கிளர்ச்சிப் படை ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. தற்போதைய சூழலில் மியான்மரின் 50 சதவீத பகுதிகள் மட்டுமே ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. மீதமுள்ள 50 சதவீத பகுதிகளை அரக்கான் படை நிர்வகித்து வருகிறது. இருதரப்பும் இடையே தீவிரமாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளே நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன. பொதுவாக மியான்மரின் ராணுவ நிர்வாகம், வெளிநாடுகளின் உதவியை கோருவது கிடையாது. நிலநடுக்க பாதிப்பு அளவுக்கு அதிகமாக இருப்பதால் முதல்முறையாக மியான்மர் ராணுவ தலைமை தளபதி மின் ஆங் ஹலாங், சர்வதேச நாடுகளிடம் பகிரங்கமாக உதவி கோரி உள்ளார்.

மியான்மர் ராணுவ நிர்வாகம் வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, நிலநடுக்கத்தால் இதுவரை 1,644 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சுமார் 3,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. பலரும் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

தாய்லாந்து நிலவரம் என்ன? - மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்திலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் தலைநகர் பாங்காக்கில் புதிதாக கட்டப்பட்ட 30 மாடி கட்டிடம் இடிந்து நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். 42 பேர் படுகாயம் அடைந்தனர். 78 பேர் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாத்தில் பாங்காக் உட்பட 10 பகுதிகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. சுமார் 2,000-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன. தாய்லாந்தில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x