Published : 28 Mar 2025 07:47 PM
Last Updated : 28 Mar 2025 07:47 PM

மியான்மர் பூகம்பம், தாய்லாந்து நிலநடுக்கம்: இதுவரை 23 பேர் பலி; சாலைகள், கட்டிடங்கள் சேதம்

நைப்பியிதோ: மியான்மரில் பூகம்பமும், அதன் தாக்கத்தால் தாய்லாந்தில் கடும் நில அதிர்வும் ஏற்பட்ட நிலையில், பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், மியான்மரில் இதுவரை 20 பேரும், பாங்காக்கில் 3 பேரும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

மியான்மரை இன்று இரண்டு பூகம்பங்கள் தாக்கியதில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஏற்கெனவே ராணுவ ஆட்சியின் கீழ் இருந்துவரும் மியான்மரில் பல பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி முற்பகல் 11.50 மணிக்கு ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக நில நடுக்கங்கள் பதிவாகின. இந்த பூகம்ப பாதிப்புகள் அண்டை நாடான தாய்லாந்திலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பல இடங்களில் பாதுகாப்பு கருதி பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மியான்மரில் 20 பேர் பலி: இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய தகவல்கள் உடனடியாக வெளியாகாத நிலையில், தற்போது உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மியான்மரில் பூகம்பத்துக்கு 20 பேர் இதுவரை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் நைப்பியிதோவில் உள்ள பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாளத்தை வெளியிட விரும்பாத மருத்துவர் ஒருவர் கூறுகையில், "மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் 20 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்" என்று தெரிவித்தார். இதனிடையே, மியான்மர் ராணுவ ஆட்சிக் குழு சர்வதேச உதவிக்கு அழைப்பும் விடுத்துள்ளது.

மியான்மரில் உள்கட்டமைப்புகள் சேதம் - செஞ்சிலுவை சங்கம்: பூகம்பம் காரணமாக மியான்மரில் உள்கட்டமைப்பு வசதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மேரி மான்ரிக் கூறுகையில், "சாலைகள், பாலங்கள், அரசு கட்டிடங்கள் என பொது உள்கட்டமைப்பு வசதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது எங்களுக்கு பெரிய அணைகள் பற்றி கவலை எழுந்துள்ளது. அவற்றின் நிலைமைகள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

தாய்லாந்தில் 3 பேர் பலி: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பெரிய கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். சுமார் 80 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் சியாங் மாய் உள்ளிட்ட வடக்கு தாய்லாந்து சிறிது நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அங்குள்ளவர்கள் இந்த நிலநடுக்கம் இதுவரை உணர்ந்திராத அளவில் பயங்கரமாக இருந்தது எனத் தெரிவித்தனர். இதனிடைய இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு உள்ளிட்ட சர்வதேச நாடுகள் உதவி முன்வந்துள்ளன.

தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினாவத்ரா நாட்டில் அவசர நிலையை அறிவித்துள்ளார். தலைநகர் பாங்காக் பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. பேரிடர் மீட்பு பணிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் பாங்காக் ஆளுநர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி உறுதி: “மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் உருவாக்கியிருக்கும் பாதிப்புகளை கேட்டு கவலையுற்றேன். அனைவரின் நலன் மற்றும் பாதுகாப்புக்காக இறைவனை வேண்டுகிறேன். அனைத்து சாத்தியமான உதவிகளைச் செய்ய இந்தியா தயாராக இருக்கிறது.

இது தொடர்பாக தயார் நிலையில் இருக்கும்படி அதிகாரிகளுக்குச் சொல்லப்பட்டுள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசுடன் தொடர்பில் இருக்கும் படி வெளியுறவு அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தாய்லாந்தில் வசிக்கும் இந்தியர்களுக்காக பாங்காகில் உள்ள இந்திய தூதரகம் உதவி எண்ணை வெளியிட்டுள்ளது. அவர்கள் ஏதாவது அவசரத் தேவைக்கு அந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. மேலும், தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x