Published : 27 Mar 2025 01:01 PM
Last Updated : 27 Mar 2025 01:01 PM

நேரடித் தாக்குதல்: வாகன இறக்குமதிக்கான ட்ரம்பின் 25% வரி குறித்து உலக நாடுகள் எதிர்வினை 

வாஷிங்டன்: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் அதன் முக்கிய உதிரி பாகங்களுக்கு நிரந்தரமாக 25 சதவீதம் கட்டணம் விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்புக்கு உலக நாடுகள் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளன. இது மிகவும் நேரடியான தாக்குதல் என்றும் சாடியுள்ளன.

அமெரிக்காவில் மீண்டும் உற்பத்தித்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை கொண்டுவரும் முயற்சியாக அந்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 25 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் புதன்கிழமை அறிவித்திருந்தார். தனது புதிய வர்த்தக நடவடிக்கை நிரந்தரமானது, இது வரி வருவாயை அதிகரித்து, உற்பத்தித்துறை சார்ந்த வேலைகளை நாட்டில் அதிகப்படுத்தும் என்று தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும், "இந்தக் கூடுதல் கட்டணம், முழுவதும் அசெம்பிள் செய்யப்பட்ட வாகனங்களுக்கு பொருந்தும் மற்றும் வாகன இஞ்சின்கள், டிரான்ஸ்மிசன்கள், பவர்ட்ரெயின் பாகங்கள் மற்றும் மின்னணு உதிரி பாகங்கள் உள்ளிட்ட முக்கியமான உதிரிபாகங்களுக்கும் பொருந்தும். இந்த பட்டியல் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம்" என்று தெரிவித்திருந்தது. ட்ரம்பின் இந்த அறிவிப்புக்கு உலக நாடுகள் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளன.

கனடா: கனடாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் மார்க் கார்னே, “இது மிகவும் நேரடியானத் தாக்குதல். நாங்கள் எங்களுடைய தொழிலாளர்களைப் பாதுகாப்போம். நிறுவனங்களைப் பாதுகாப்போம். நாட்டினைப் பாதுகாப்போம்” என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு கனடா சுமார் 35 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அமெரிக்கச் சந்தைக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்தது குறிப்பிடத்தகது.

ஐரோப்பிய ஆணையம்: ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறைவேற்று செயற்குழுவான ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன் டேர் லியென், ட்ரம்பின் கட்டண அதிகரிப்புக்கு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “கட்டணங்கள் வரிகளே. இது வணிகத்துக்கு பாதகமானது. அதேபோல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனின் நுகர்வோர்களுக்கும் ஆபத்தானது.” என அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஜப்பான்: ட்ரம்பின் கட்டண அதிகரிப்பு குறித்து ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா கூறுகையில், “நாங்கள் அமெரிக்காவில் முதலீடு செய்துள்ளோம். அங்கு வேலைவாய்ப்புகளை வழங்குகிறோம். அதிக அளவில் ஊதியம் வழங்குகிறோம். அமெரிக்காவின் அதிக முதலீடு செய்திருப்பவர்களில் நாங்களும் உண்டு. அனைத்து நாடுகளையும் ஒரேமாதிரி நடத்துவது சரியில்லை என்று அமெரிக்காவுக்கு தெளிவாக உணர்த்துவோம்.” என்று தெரிவித்தார்.

இங்கிலாந்து: டொனால்ட் ட்ரம்பின் கட்டணங்கள் அதிகரிப்பு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து வணிகம் மற்றும் நுகர்வோரை வெகுவாக பாதிக்கும் என்று இங்கிலாந்தின் தொழில்துறை அமைப்பான மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் (எஸ்எம்எம்டி) எச்சரித்துள்ளது.

அதேபோல், அமெரிக்காவைச் சாராத கார் உற்பத்தியாளர்களுக்கான குழுவான ஆட்டோஸ் டிரைவ் அமெரிக்கா, “இன்று அமல்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டணங்கள் அமெரிக்காவில் கார் உற்பத்தி செலவை அதிகரிக்கும். இறுதியில் அதிக விலை, வாடிக்கையாளர்களுக்கு குறைவான தேர்வு விருப்பம் மற்றும் அமெரிக்க உற்பத்தி துறையில் குறைவான வேலைவாய்ப்புகள் போன்றவைகளுக்கு வழிவகுக்கும்” என்று எச்சரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x