Published : 25 Mar 2025 10:47 AM
Last Updated : 25 Mar 2025 10:47 AM

நியூஸிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.7 ஆக பதிவு

கிறைஸ்ட்சர்ச்: நியூஸிலாந்து நாட்டின் தெற்கு தீவு பகுதியில் இன்று (மார்ச் 25) காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.7 ஆக பதிவானது. இதையடுத்து நிலநடுக்கம் உணரப்பட்ட சவுத்லாந்து மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை தரப்பட்டது.

அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கடற்கரை மற்றும் கடலோர பகுதிகளை தவிர்க்க வேண்டும் என அந்நாட்டின் தேசிய அவசரநிலை மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. இருப்பினும் சுனாமி பேரலை அபாயம் நியூஸிலாந்துக்கு இல்லை என ஆஸ்திரேலிய தேசிய வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் குறித்து மக்கள் சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளனர்.

கட்டிடங்கள் குலுங்கியதாக நியூஸிலாந்து நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சுமார் 4,700-க்கும் மேற்பட்ட மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக அந்த நாட்டின் நில அதிர்வு ஆய்வு மையமான ஜியோநெட் கூறியுள்ளது.

‘ஷெல்ஃப்களில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மற்றும் மேஜைகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சரிந்து கீழே விழுந்தன’ என சமூக வலைதளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார். நியூஸிலாந்தின் துணை-அண்டார்டிக் தீவுகளின் வடக்கே, ஸ்னேரஸ் தீவுகளிலிருந்து வடமேற்கே சுமார் 160 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் 33 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள நியூஸிலாந்து நில அதிர்வு அபாயம் உள்ள பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x