Published : 17 Mar 2025 06:30 AM
Last Updated : 17 Mar 2025 06:30 AM

சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 19-ல் பூமிக்கு திரும்புகிறார் - 9 மாத தாக்கம் எத்தகையது?

‘டிராகன்’ விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நேற்று வந்த புதிய வீரர்களை வரவேற்ற சுனிதா வில்லியம்ஸ். படம்: பிடிஐ

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வரும் 19-ம் தேதி பூமிக்கு திரும்புகிறார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களுக்கு மேலாக தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் இதர வீரர்களுக்கு உடல்நிலையில் ஏற்படக் கூடிய தாக்கம் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் இணைந்து கடந்த 1998-ம் ஆண்டு நவம்பரில் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்தன. இது, பூமியில் இருந்து சுமார் 460 கி.மீ. தொலைவில் உள்ளது. மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் பூமியை சுற்றி வருகிறது.

109 மீட்டர் நீளம், 73 மீட்டர் அகலம், 45 மீட்டர் உயரம், 450 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையத்தில் 7 பேர் அடங்கிய குழு தங்கியிருந்து ஆய்வு செய்து வருகிறது. 6 மாதங்களுக்கு ஒருமுறை குழுவினர் மாற்றப்படுவது வழக்கம். அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு கடந்த 2011-ம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) விண்கலங்களை அனுப்பும் பணியை முற்றிலுமாக நிறுத்திவிட்டது. தற்போது அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம், ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் மட்டுமே ஐஎஸ்எஸ் நிலையத்துக்கு சென்று திரும்புகின்றன.

இந்த சூழலில் அமெரிக்காவின் போயிங் நிறுவனம், ஸ்டார்லைனர் என்ற விண்கலத்தை தயாரித்தது. புதிய ஸ்டார்லைனர் விண்கலத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி ஐஎஸ்எஸ் நிலையத்துக்கு சென்றனர்.

இவர்கள் 10 நாட்கள் ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் ஆட்கள் இன்றி வெறுமையாக பூமிக்கு திரும்பியது.

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம், இரு வீரர்களுடன் ஐஎஸ்எஸ் நிலையத்துக்கு சென்றது. இந்த விண்கலம் மூலம் சுனிதா, பேரி வில்மோரை பூமிக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டது.

தற்போது ஐஎஸ்எஸ் நிலையத்தில் அமெரிக்காவை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர், நிக் ஹேக், டான் பெடிட், ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸி, இவான் வேக்னர், அலெக்சாண்டர் ஆகிய 7 பேர் தங்கியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அமெரிக்காவை சேர்ந்த ஆனி மெக்லைன், நிகோல் அயர்ஸ், ஜப்பானை சேர்ந்த டகுயா ஒனிஷி, ரஷ்யாவை சேர்ந்த கிரிஸ் பெஸ்கோஸ் ஆகியோர், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) புறப்பட்டனர்.

அமெரிக்காவின் புளாரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட டிராகன் விண்கலம் நேற்று ஐஎஸ்எஸ் நிலையத்தில் வெற்றிகரமாக இணைந்தது. பூமியில் இருந்து புதிதாக வந்த 4 விண்வெளி வீரர்களை, ஐஎஸ்எஸ் நிலையத்தில் தங்கியிருக்கும் சுனிதா உள்ளிட்ட 7 வீரர்களும் ஆரத் தழுவி வரவேற்றனர். அடுத்த சில நாட்களில் புதிய வீரர்களிடம் பணிகளை ஒப்படைத்துவிட்டு 4 வீரர்கள், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்ப உள்ளனர்.

இதுகுறித்து நாசா விண்வெளி அமைப்பு சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “மார்ச் 19-ம் தேதி ஐஎஸ்எஸ் நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் மூலம் அமெரிக்காவை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர், நிக் ஹேக் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் பூமிக்கு திரும்ப உள்ளனர். வானிலையை பொறுத்து தேதி மாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது" என்று தெரிவித்துள்ளது.

உடல்நிலை சீராக ஓராண்டு ஆகும்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களுக்கு மேலாக தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் இதர வீரர்கள் பூமிக்கு திரும்பியதும் அவர்களுக்கு பல்வேறு உடல்நலக் குறைவுகள் ஏற்படும்.

விண்வெளியில் தங்கியிருந்ததால் அவர்களின் எலும்புகள், தசைநார்கள் பலவீனம் அடைந்திருக்கும். அவர்களின் தோல், குழந்தைகளின் தோல் போன்று மிகவும் மென்மையாக மாறியிருக்கும். கண்பார்வை திறன் பாதிக்கப்பட்டு இருக்கும். கதிரியக்க பாதிப்பு காரணமாக செல்கள், ரத்த அணுக்களும் பாதிக்கப்பட்டிருக்கும்.

பூமிக்கு திரும்பியதும் அவர்களுக்கு தலைவலி, தலைசுற்றல், வாந்தி ஏற்படும். எலும்பு, தசைநார்கள் பலவீனம் அடைந்திருப்பதால் அவர்களால் தரையில் கால் ஊன்றி நடக்க முடியாது. சுமார் 3 மாதங்கள் முதல் ஓராண்டுக்கு பிறகே சுனிதா உள்ளிட்டோர் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள்.

சுனிதா வில்லியம்ஸின் சம்பளம்: நாசாவின் சம்பள பட்டியலில் ஜிஎஸ்-15 கிரேடில் சுனிதா வில்லியம்ஸ் உள்ளார். இதன்படி அவருக்கு ஓராண்டில் ரூ.1.41 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்கள் தங்கிருந்ததற்காக ரூ.1.05 கோடி, இதர படிகள் வகையில் ரூ.1.06 கோடி அவருக்கு கிடைக்கும் என்று நாசா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x