Published : 16 Mar 2025 04:48 PM
Last Updated : 16 Mar 2025 04:48 PM
தெஹ்ரான்: “ஈரான் போர் தொடுக்காது. அதே நேரத்தில் யாரேனும் எங்களை அச்சுறுத்தினால் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம்.” என ஈரான் பாதுகாப்புப் படையின் தலைவர் ஹொசைன் சலாமி தெரிவித்துள்ளார். முன்னதாக, ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சி படைக்கு ஈரான் ஆதரவு தரக்கூடாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
ஏமனில் அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கான உத்தரவை ட்ரம்ப் பிறப்பித்தார். இது குறித்து அவர் சமூக வலைதள பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாக சொல்லி இதனை ஹவுதி கிளர்ச்சிப் படையும் உறுதி செய்தது.
“ஈரான் போர் தொடுக்காது. ஆனால், யாரேனும் அச்சுறுத்தினால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். ஏமன் நாட்டின் பிரதிநிதியாக உள்ள ஹவுதி கிளர்ச்சிப் படை தன்னிச்சையாக செயல்படுகிறது. அதன் உத்தி மற்றும் செயல்பாடும் அவர்களை சார்ந்தது.” என ஹொசைன் சலாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 2020-ல் அதிபர் ட்ரம்ப் முதல் முறையாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது பாக்தாத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலில் அமெரிக்க ராணுவம் ஈரான் வெளிநாட்டு நடவடிக்கை ஆயுத தளபதி காசிம் சுலைமானியை கொன்றது. இதற்கு ஈரான் கொடுத்த பதிலடியில் அமெரிக்க ராணுவத்தை சேர்ந்தவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும் மன ரீதியான பாதிப்புக்கு ஆளானதாக அமெரிக்கா தெரிவித்தது.
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் உச்சக்கட்டத்தில் இருந்த போது செங்கடல் வழியாக கடக்கும் இஸ்ரேல் கப்பல்களை ஹவுதி படையினர் தாக்கி இருந்தனர். தாங்கள் ஹமாஸுக்கு ஆதரவாக இருப்பதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்திருந்தனர்.
முன்னதாக, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள ஏமன் நாட்டின் பகுதியை குறிவைத்து தீவிர தாக்குதல் மேற்கொள்ள அமெரிக்க படைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அந்த நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். மேலும், ஹவுதி கிளர்ச்சிக் குழுவை ஆதரிப்பதை நிறுத்துமாறு ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதற்கு தான் தற்போது ஈரான் பதில் கொடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...