Published : 14 Mar 2025 09:01 AM
Last Updated : 14 Mar 2025 09:01 AM

‘போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம், ஆனால்.. ’ - புதின் அடுக்கும் நிபந்தனைகள்

மாஸ்கோ: “30 நாட்கள் போர் நிறுத்தம் என்ற அமெரிக்காவின் பரிந்துரையை நாங்கள் ஏற்கிறோம். ஆனால், அதற்கு முன்னர் சில பிரச்சினைகளைக் களைய வேண்டும்.” என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சவுதி அரேபியாவில் அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அந்நாடு முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் ஒப்புக் கொண்டது. ரஷ்யாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் உக்ரைன் சம்மதம் தெரிவித்திருந்தது. இந்த போர்நிறுத்த ஒப்பந்தம், நிலம், கடல் மற்றும் வான்வழித்தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இந்நிலையில் இந்த போர் நிறுத்தத்துக்கு ரஷ்ய அதிபர் புதினும் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார் புதின். அப்போது அவர், “ரஷ்ய - உக்ரைன் போர் நிறுத்தத்துக்காக முயற்சிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் அதிபர் லூலா டிசில்வா ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் உன்னத இலக்கு வெறுப்பை, உயிரிழப்புகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக உள்ளது. சவுதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க அழுத்தத்தின் பேரில் உக்ரைன் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் தெரிவித்தது போல் வெளித்தோற்றத்துக்கு புலப்படலாம். ஆனால் உண்மையில், உக்ரைன் தான் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர அமெரிக்க தரப்பிடம் வலியுறுத்தியிருக்க வேண்டும். கள நிலவரம் அவர்கள் அப்படிக் கோருவதற்கான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது.

30 நாட்கள் போர் நிறுத்தம் என்ற அமெரிக்காவின் பரிந்துரையை நாங்கள் ஏற்கிறோம். ஆனால், அதற்கு முன்னர் சில பிரச்சினைகளைக் களைய வேண்டும். இது குறித்து அமெரிக்காவும், எங்கள் கூட்டாளிகளுடன் நாங்கள் விவாதிக்க வேண்டும். விரைவில் இவ்விவகாரம் பற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் ஒரு தொலைபேசி உரையாடலை எதிர்நோக்கியுள்ளேன். இந்தப் போர் நிறுத்தம் என்பது நீண்ட கால அமைதிக்கு வித்திடுவதாக இருக்க வேண்டும்.

உக்ரைன் படைகள் ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ளன. இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் அமலாவதற்கு முன்னதாக, அங்கிருக்கும் படையினர் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும். அதேபோல் அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்கான வலுவான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். மொத்தத்தில் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தமானது பிரச்சினையின் வேரை நாடி சிக்கலைத் தீர்ப்பதாக அமைய வேண்டும்.” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x