Published : 03 Mar 2025 12:13 PM
Last Updated : 03 Mar 2025 12:13 PM
கீவ்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “இது உக்ரைனின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான நன்றியுணர்வு” என குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்த போரில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகிறது. அமெரிக்கா 350 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை உக்ரைனுக்குக் கொடுத்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உள்ளிட்டோரை ஜெலன்ஸ்கி சந்தித்தது சர்ச்சையானது. அப்போது, ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவிக்காததை சுட்டிக்காட்டினார். அப்போது, வான்ஸ் குரலை உயர்த்திப் பேசுவதாக ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டினார். இந்த சந்திப்பின்போது, இருதரப்புக்கும் இடையே மேற்கொள்ளப்பட இருந்த கனிம வளம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. அதோடு, பேச்சுவார்த்தை பாதியில் முடிவுக்கு வந்து ஜெலன்ஸ்கியும் அவரது குழுவினரும் அங்கிருந்து வெளியேறினர்.
இதன் தொடர்ச்சியாக, உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வரும் ஐரோப்பிய நாடுகளின் உச்சிமாநாடு நேற்று (மார்ச் 02) லண்டனில் நடைபெற்றது. இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நடத்திய இந்த பாதுகாப்பு உச்சிமாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்ளிட்ட 18 தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தங்களது ஆதரவை உறுதிப்படுத்தின. மேலும், இங்கிலாந்து, உக்ரைனுக்கு கடன் வழங்குவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியது.
இந்த மாநாட்டை அடுத்து ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், “தற்போது கிடைத்துள்ள பலன் என்னவென்றால், ஐரோப்பாவிடமிருந்து தெளிவான ஆதரவை நாங்கள் பெற்றுள்ளோம். இன்னும் அதிக ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புக்கான இன்னும் அதிக விருப்பத்தை நாங்கள் கொண்டிருக்கிறோம்.
அமைதி உண்மையானதாக இருக்க, உக்ரைனுக்கு உண்மையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவை எனும் முக்கிய பிரச்சினையில் அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர். இங்கிலாந்து உள்பட ஒட்டுமொத்த ஐரோப்பிய கண்டத்தின் நிலைப்பாடு இதுதான்.
அமெரிக்காவின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அமெரிக்காவிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.நன்றியை உணராத நாள் இல்லை. இது நமது சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான நன்றியுணர்வு.
உக்ரைனில் நமது எதிர் தாக்குதல் என்பது எங்கள் கூட்டாளிகள் எங்களுக்காகவும் அவர்களின் சொந்த பாதுகாப்பிற்காகவும் என்ன செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தது.
எங்களுக்குத் தேவை அமைதி, முடிவில்லாத போர் அல்ல. அதனால்தான் பாதுகாப்பு உத்தரவாதங்கள் இதற்கு முக்கியம் என்று நாங்கள் கூறுகிறோம்.” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...