Published : 20 Feb 2025 12:36 PM
Last Updated : 20 Feb 2025 12:36 PM
வாஷிங்டன்: எலான் மஸ்க் தனது டெஸ்லா நிறுவனம் சார்பில் இந்தியாவில் கார் தொழிற்சாலையை அமைத்தால் அது அமெரிக்காவுக்கு அநீதியானது என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து, பிரதமர் மோடியை தொழிலதிபர் எலான் மஸ்க் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பை அடுத்து, அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்க ஆர்வமாக உள்ளதாகவும், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியது. இதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் வேலைக்கு ஆள் எடுப்பது தொடர்பான விளம்பரத்தை லிங்க்டு இன் பக்கத்தில் டெஸ்லா கடந்த திங்கள்கிழமை வெளியிட்டது. அதில் 13 பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
இந்நிலையில், ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு நேற்று முன்தினம் (பிப். 18) பேட்டி அளித்த டொனால்ட் ட்ரம்ப், "இப்போது, அவர் இந்தியாவில் தொழிற்சாலையை அமைத்தால், அது நமக்கு (அமெரிக்காவுக்கு) அநீதியானது.
உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் நம்மைப் பயன்படுத்திக் கொள்கிறது. அவர்கள் அதை அதிக வரிகளுடன் செய்கிறார்கள். உதாரணமாக, இந்தியாவில் நாம் ஒரு காரை விற்பனை செய்வது சாத்தியமற்றது," என்று தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் மின்சார கார்களை உற்பத்தி செய்து வரும் நிலையில், கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி வரியை 15% ஆக குறைப்பதற்கான கொள்கையை அறிவித்துள்ளது. இந்த கொள்கையின்படி, ஒரு கார் தயாரிப்பாளர் குறைந்தபட்சம் $500 மில்லியன் முதலீடு செய்து ஒரு தொழிற்சாலையை இந்தியாவில் அமைத்தால், அந்நிறுவனத்தின் கார்களுக்கான இறக்குமதி வரி 15% ஆகக் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மூன்றாவது பெரிய ஆட்டோமொபைல் சந்தையை கொண்டுள்ள இந்தியாவில், டாடா மோட்டார்ஸ் போன்ற உள்ளூர் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் வகையில், மின்சார வாகனங்களுக்கு இந்தியா சுமார் 100% இறக்குமதி வரிகளை விதிப்பதாக டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஏற்கனவே விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...