Published : 03 Feb 2025 01:53 AM
Last Updated : 03 Feb 2025 01:53 AM

அமெரிக்க பொருட்களுக்கு 25% வரி: கனடா பிரதமர் ஜஸ்டின் அதிரடி அறிவிப்பு

அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

கடந்த 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அண்டை நாடான கனடாவை, அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று அவர் கூறி வருகிறார். இதற்கு கனடா அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த சூழலில் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இந்த நடைமுறை கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதுதொடர்பாக கனடா தலைநகர் ஒட்டாவோவில் நேற்று அவர் கூறியதாவது:

புவியியல் காரணமாக அமெரிக்காவும் கனடாவும் அண்டை நாடுகளாக உள்ளன. கடந்த கால வரலாறால் இரு நாடுகளும் நண்பர்களாக உள்ளன. பொருளாதாரத்தின் அடிப்படையில் இரு நாடுகளும் மிக நெருங்கிய வர்த்தக பங்காளிகளாக உள்ளன. காலத்தின் கட்டளையால் இரு நாடுகளும் ஓரணியாக செயல்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் இருண்ட காலங்களில் கனடா, உற்ற நண்பனாக செயல்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் போர் முதல் தற்போது கலிபோர்னியாவில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீயை அணைப்பது வரை அமெரிக்காவுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறோம்.

கடந்த கால நட்புறவை புதிய அதிபர் ட்ரம்ப் முன்னெடுத்து சென்றிருக்க வேண்டும். ஆனால் அவர் கனடா பொருட்கள் மீது கூடுதல் வரியை விதித்து வர்த்தக போரை தொடங்கி உள்ளார். எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்களும் அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதிக்கிறோம். இது அமெரிக்காவுக்கு பல்வேறு வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

மெக்ஸிகோ பொருட்களுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 25 சதவீத வரியை விதித்து இருக்கிறார். இதுதொடர்பாக மெக்ஸிகோ அதிபர் கிளாடியா கூறும்போது, “அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுக்க நிதியமைச்சருக்கு உத்தரவிட்டு உள்ளேன். அதிக வரி விதிப்பால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. இருதரப்பு ஒத்துழைப்பால் மட்டுமே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க தொழில் துறை வட்டாரங்கள் கூறியதாவது: மெக்ஸிகோவில் இருந்து பழங்கள், காய்கனிகள், தானியங்கள், இறைச்சி, கார் உதிரி பாகங்கள், மதுபானங்கள் உள்ளிட்டவை அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதிபர் ட்ரம்பின் நடவடிக்கையால் இரு நாடுகள் இடையிலான வர்த்தகம் பாதிக்கப்படும். அமெரிக்காவில் அத்தியாசிய பொருட்களின் விலை உயரக்கூடும்.

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட தாதுக்கள், கட்டுமான பொருட்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவற்றின் ஏற்றுமதியை கனடா நிறுத்தக்கூடும். இதனால் அமெரிக்காவில் எரிபொருள், தாதுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.

சீன பொருட்கள் மீது 10 சதவீத வரியை அதிபர் ட்ரம்ப் விதித்துள்ளார். அந்த நாட்டில் இருந்து காலணிகள், ஜவுளி, விளையாட்டு உபகரணங்கள், பொம்மைகள் உள்ளிட்டவை அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகின்றன. இவற்றின் இறக்குமதியும் பாதிக்கப்படும். இவ்வாறு அமெரிக்க தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கிரீன்லேண்ட் விவகாரம்: ஆர்டிக், அட்லான்டிக் பகுதிகளுக்கு நடுவே கிரீன்லேண்ட் அமைந்துள்ளது. இந்த பகுதி தற்போது டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், கிரீன்லேண்டை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவோம் என்று கூறி வருகிறார். இதற்கு பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் முயற்சியை தடுத்து நிறுத்துவோம் என்று பிரான்ஸ் வெளியுறவு அதிபர் ஜீன் நோயல் பாரட் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பனாமா கால்வாய் விவகாரம்: கொலம்பியாவின் கட்டுப்பாட்டில் இருந்த பனாமா, அமெரிக்காவின் ஆதரவுடன் கடந்த 1903-ம் ஆண்டில் விடுதலை அடைந்தது. அந்த நாட்டில் அமெரிக்காவின் சார்பில் கடந்த 1914-ம் ஆண்டில் பனாமா கால்வாய் கட்டி முடிக்கப்பட்டது. பசிபிக், அட்லாண்டிக் கடலை இணைக்கும் பனாமா கால்வாய் வழியாக ஆண்டுக்கு 15,000 சரக்கு கப்பல்கள் கடந்து செல்கின்றன.

கடந்த 1978-ம் ஆண்டு வரை பனாமா கால்வாய் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது பனாமா அரசு கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கால்வாயை மீண்டும் கைப்பற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வருகிறார். இதற்கும் சர்வதேச அளவில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x