Published : 07 Jul 2018 10:23 PM
Last Updated : 07 Jul 2018 10:23 PM
உலகில் மக்கள் தொடர்ந்து வசித்து வரும் மிகப் பழமையான நகரங்கள் என்று ஒரு சிறிய பட்டியலிட்டால் அதில் ரோம் நகருக்கு நிச்சயம் இடம் உண்டு. ஆனால் அதைவிட 28 வருடங்கள் பழமையான நகரம் ‘எரெவான்’. இந்த ஆண்டு தனது 2800-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
உலக நாடுகளிலேயே கிறிஸ்தவ மதத்தை ஆட்சி மதமாக ஏற்றுக் கொண்ட முதல் நாடு அர்மீனியா (துருக்கிக்கு கிழக்குப் புறமும், ஈரானுக்கு வடக்குப் புறமுமாக உள்ளது). அர்மீனியா நாடு அடுத்தடுத்த பல நகரங்களை தனது தலைநகராக்கி அழகு பார்த்த நாடு. ஆனால் 1918-ல் இருந்து அதன் அசைக்க முடியாத (13-வது) தலைநகராக விளங்கி வருகிறது எரெவான். ரஜ்தான் நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் இது.
ஏசுநாதர் இறந்த சில ஆண்டுகளிலேயே அர்மீனிய ராஜாங்கத்தில் கிறிஸ்தவ மதம் வேகமாக பரவத் தொடங்கியது. நான்காம் நூற்றாண்டில் இது ஆட்சி மதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அப்போது வேறெந்த நாடும் கிறிஸ்தவ மதத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. எரெவானின் அருகில் சரித்திரப் புகழ் பெற்ற அரராத் மலை உள்ளது.
எரெவான் நகரில் நிறைய மாதா கோயில்கள் காணப்படுவதில் வியப்பில்லை. எனினும் உலகின் பிரம்மாண்டமான, பிரபலமான மாதா கோயில் இங்கு உள்ளதா என்று கேட்டால் ‘ஆமாம்’ என்று சட்டென்று கூறிவிட முடியாது. ஆனாலும் ஒன்பதாம் நூற்றாண்டில் அங்கு எழுப்பப்பட்ட ததேவ் (கிறிஸ்தவ) மடாலயம் மிகவும் குறிப்பிடத்தக்கது. உயரத்தில் உள்ள இந்தப் பகுதியை அடைய கயிற்று ரயிலைப் பயன்படுத்தலாம். உலகின் நீளமான roperail இதுதான் - 5752 மீட்டர் நீளம்.
எரெவான் பல்வேறு ஆட்சிகளை சந்தித்து வந்த நகரம். ரோமானியர்களின் வசம் வந்தது. பிறகு பார்த்தியப் பேரரசின் கட்டுப்பாட்டில் வந்தது (ஈரான்-இராக்கில் வளர்ந்த பேரரசு இது). பின்னர் அரேபியர்கள், மங்கோலியர்கள், துருக்கியர்கள், பாரசீகர்கள், ரஷ்யர்கள் என்று மாறி மாறி இதைத் தன்வசமாக்கிக் கொண்டார்கள். 1582-ல் துருக்கியர்கள் வசமானது. பின்னர் மீண்டும் ரஷ்யர்கள் கைக்குச் சென்றது. 1920-ல் இது அர்மீனியக் குடியரசின் தலைநகரானது.
எரெவான் ‘பிங்க் நகரம்’ என்றுதான் அழைக்கப்படுகிறது. அங்குள்ள எரிமலைப் பாறைகள் பிங்க் வண்ணத்தில் காணப்படுகின்றன. எரெவானில் உள்ள பல கட்டடங்கள் இந்தப் பாறை கற்களால்தான் கட்டப்பட்டுள்ளன. அர்மீனியாவின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேர் எரெவானில்தான் வசிக்கிறார்கள். பழங்காலத்தல் எரெபுனி என்ற பெயரில் இந்த நகரம் அழைக்கப்பட்டது. பிறகு எரிவான். இப்போது எரெவான்.
கி.மு. 782-ல் எழுப்பப்பட்ட ஒரு பெரும் கோட்டை, இந்த நகரின் அடையாளமாகவும் சரித்திரச் சின்னமாகவும் விளங்கியது. அர்மீனியாவைப் பொருத்தவரை அதன் மக்களில் மிகப் பலரும் இப்போது பிற நாடுகளில்தான் வசிக்கிறார்கள்! 1915-ல் ஒட்டாமன் அரசு அர்மீனியர்களை இனப்படுகொலை செய்தது. முதலாம் உலகப்போரில் நடைபெற்ற இந்த இனப் படுகொலையின்போது தப்பிய ஆயிரக்கணக்கான அர்மீனியர்கள் எரெவானில் குடியேறினார்கள். கோட்டையும் அவர்கள் பாதுகாப்புக்கு உறுதியளித்தது. இது அர்மீனிய தலைநகராக மாறியதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.
பின்னர் எரெவான் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக விளங்கியது. சோவியத் யூனியன் கலைந்தபோது தனி நாடானது. ரஷ்யாவின் பரப்பளவோடு ஒப்பிட்டால் அர்மீனியா மிகச் சிறியது (200-ல் ஒரு பங்கு என்று கூடச் சொல்லலாம்). இருப்பினும் சரித்திரச் சிறப்புகளைக் கொண்டு இன்னமும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது எரெவான்.
அர்மீனியாவின் நிர்வாகம், கலாச்சார மையமாக எரெவான் விளங்குகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளைத் தாண்டியும் அது உயிர்ப்போடு இருக்கிறது. சில வருடங்களுக்கு முன் ஒரு போட்டியை வைத்து புதிய கீதத்தை தேர்ந்தெடுத்தது எரெவான். ஆக பொதுவான தேசிய கீதத்தைத் தவிர தனியாக எரெவான் கீதம் ஒன்று உண்டு. தன் நகருக்கென புதிய கொடி ஒன்றையும் உருவாக்கிக் கொண்டது.
அமெரிக்கக் கொடியில், அதன் ஒவ்வொரு குடியரசையும் குறிக்கும் வகையில் ஒரு நட்சத்திரம் இருக்கும். எரெவானின் கொடியில் அந்த நகரின் முத்திரையைச் சுற்றி 12 சிறிய சிவப்பு முக்கோணங்கள். இவை அர்மீனியாவின் முந்தைய 12 தலைநகரங்களைக் குறிக்கிறதா! நிஜமாகவே சரித்திரத்தைப் போற்றும் நகரமாகத்தான் அர்மீனியா தோற்றமளிக்கிறது.
அர்மீனியாவுக்கும் சென்னைக்கும் தொடர்பு...
அர்மீனியாவுக்கும் சென்னைக்கும் கூட தொடர்பு உண்டு என்பதற்கு அடையாளமாக இருக்கிறது ஒரு தெரு. அரண்மனைக்காரன் தெரு என்றே பலராலும் அழைக்கப்பட்டாலும் இந்தத் தெருவின் அதிகாரபூர்வமான பெயர் அர்மீனியன் தெரு. என்.எஸ்.சி.போஸ் சாலையை மண்ணடி சாலையுடன் இணைக்கிறது இது.
1600-களில் சென்னையிலும் குடிபுகுந்தார்கள் அர்மீனியர்கள். தங்களுக்கான ஒரு குடியிருப்பை உயர் நீதிமன்றத்துக்கு எதிர்ப்புறமாக உள்ள இந்தப் பகுதியில் அமைத்துக் கொண்டார்கள் (சென்னையில் இறந்த தூய தாமஸின் கல்லறையை முதலில் கண்டுபிடித்தவர்கள் அர்மீனியர்கள்தான் என்பார்கள்).
பழங்கால அர்மீனியன் சர்ச் அர்மீனியன் தெருவில் உள்ளது. சுற்றிலும் உள்ள இரைச்சல்களையும் மீறி, அமைதியாகக் காட்சியளிக்கும் இந்த ‘சர்ச்’சில் 130 பேர் வரை உட்காரலாம். சென்னைக்கு வந்த அர்மீனியர்கள் நேரடியாக அர்மீனியாவிலிருந்து வந்தவர்கள் மட்டுமல்ல, பாரசீகம் (ஈரான்), மெஸபட்டோமியா (இராக்) ஆகிய இடங்களிலிருந்தும் வந்தவர்கள். இவர்களில் வணிகர்களும் உண்டு. அகதிகளும் உண்டு.
ஒரு காலத்தில் இந்த சென்னைப் பகுதியில் பல அர்மீனியர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. 2003-ல் இங்கு இரண்டு அர்மீனியர்கள்தான் வாழ்ந்தனர் என்கிறது ஒரு செய்திக் குறிப்பு. இப்போது அங்கு அர்மீனியர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT