Published : 31 Jan 2025 12:20 PM
Last Updated : 31 Jan 2025 12:20 PM
வாஷிங்டன்: டாலருக்கு பதில் வேறு ஒரு புதிய கரன்ஸியை உருவாக்கினால் 100 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்ள வேண்டியது இருக்குமென்று பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் தனது சமூக ஊடகதளமான ட்ரூத் சோசியலில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரை விட்டு விலகிச்செல்ல முயற்சிக்கின்றன. நாங்கள் அதை ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருக்கும் காலம் முடிந்துவிட்டது. எதிரிகளைப் போலத் தோன்றும் அந்த நாடுகளுடன் நாங்கள் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளவிருக்கிறோம். அதாவது அவர்கள் புதிய பிரிக்ஸ் கரன்ஸியை உருவாக்கக் கூடாது அல்லது டாலருக்கு நிகராக மற்றொரு கரன்ஸியைத் தேடக் கூடாது, இல்லையென்றால் 100 சதவீத வரிவிதிப்பைச் சந்திக்க நேரிடும் அல்லது மகத்தான அமெரிக்க பொருளாதாரத்தில் வியாபாரம் செய்யும் எதிர்பார்ப்பைக் கைவிட வேண்டும் என்பதே அது." என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 2024 டிசம்பரில் ரஷ்யா, ‘பிரிக்ஸ் நாடுகளை டாலரைப் பயன்படுத்தக் கட்டாயப்படுத்தப்படும் எந்த ஒரு நடவடிக்கையும், தேசிய பணத்தின் தேவையை வலுப்படுத்தும் ’ என்று தெரிவித்திருந்தது.
இதனிடையே, அட்லாண்டிக் கவுன்சிலின் புவிபொருளாதார மையம் நடத்திய கள ஆய்வில், முதன்மை கையிருப்பு பணமாக அமெரிக்க டாலரை உலக அளவில் நம்பியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அமெரிக்க டாலரை மதிப்பு நீக்குவதில் யூரோ மற்றும் மாற்று பணத்தை உருவாக்கும் முயற்சி தோல்வியடைந்து விட்டது என்பதை இது காட்டுகிறது.
பிரிக்ஸ் கூட்டமைப்பில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எதியோப்பியா, ஈரான், இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமிரகம் ஆகிய நாடுகள் உள்ளன. இந்தக் குழுவுக்கென தனியாக பொதுப்பணம் இல்லை. உக்ரைன் போருக்கு பின்பு, ரஷ்யா மீது மேற்குலக நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில் பொது பணத்துக்கான பேச்சுக்கள் எழுந்துள்ளது.
அதேபோல், அமெரிக்கப் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாலும், வரிவிதிப்பு மற்றும் பணவியல் கொள்கைகளில் ஏற்படும் மாற்றம் புவிசார் அரசியல் பிரச்சினைகள் காரணமாக டாலருக்கு நிகரான உந்துதல் அதிகரித்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது.
ட்ரம்பின் வரிகள்: சட்டவிரோத குடியேற்றம் மற்றும் ஒப்பியாய்டுகள் போன்ற போதை வஸ்துக்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்க அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோவுக்கு பிப்.1ம் தேதி முதல் 25 சதவீதம் வரிவிக்கப்படும் என்று ட்ரம்ப் உறுதியளித்திருந்தார்.
அமெரிக்காவுக்கு தீங்குவிளைவிக்கும் அச்சுறுத்தலாய் இருக்கும் ஒப்பியாய்டு விநியோகத்தில் சீனாவின் பங்கு இருப்பதாய் கூறி அந்நாட்டின் இறக்குமதி பொருள்களுக்கு 10 சதவீதம் வரிவிதிக்கப்போவதாக அச்சுறுத்தல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment