Published : 31 Jan 2025 09:44 AM
Last Updated : 31 Jan 2025 09:44 AM

‘பிறப்புக் குடியுரிமை’ அந்நியர்கள் அமெரிக்காவில் குவிவதற்கானது அல்ல: ட்ரம்ப் ஆவேசம்

வாஷிங்டன்: ‘பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமை வழங்கப்பட்டதன் நோக்கம் வேறு. அது அந்நியர்கள் அமெரிக்காவில் குவிவதற்கானது அல்ல’ என அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டார். “அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் யாரேனும் ஒருவர் நிரந்தர அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும். இந்த உத்தரவு 30 நாட்களில் நடைமுறைக்கு வரும். அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களின் குழந்தைகள் அமெரிக்காவின் ‘அதிகார வரம்பிற்கு உட்பட்டவர்கள்’ அல்ல என்பதால், குடியுரிமை சட்டத்தின் 14-வது திருத்தத்தில் வழங்கப்பட்ட அரசியலமைப்பு உத்தரவாதம் அவர்களுக்கு பொருந்தாது.” என்று ட்ரம்ப் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இதனை எதிர்த்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் சியாட்டல் மாகாண நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜான் கோக்னார், “ட்ரம்ப்பின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது.” எனக் கூறி அந்த உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்தார். இந்த தடை உத்தரவை எதிர்த்து அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ட்ரம்ப் ஆவேசம்: இந்நிலையில் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் பேசிய அதிபர் ட்ரம்ப், “பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமை கொண்டுவரப்பட்டதன் நோக்கம் வேறு. அது உன்னதமானது. அந்த நோக்கத்துக்காக அது அமலில் இருக்குமேயானால் நான் அதனை 100 சதவீதம் வரவேற்பேன். ஏனெனில், அது அடிமைகளாக இருந்தவர்களின் குழந்தைகளின் நலனுக்காகக் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதைப் பயன்படுத்தி இப்போது ஒட்டுமொத்த உலகமும் அமெரிக்காவில் குவிய நினைக்கிறது.

எல்லோரும் அமெரிக்காவுக்கு வருகிறார்கள். அவர்கள் தகுதியவற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் குழந்தைகளும் தகுதியற்றவர்களாகத்தானே இருப்பார்கள். அப்படியிருக்க பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ஊக்குவிக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் நாம் வெற்றி பெறுவோம். அந்த வெற்றியை நான் எதிர்நோக்கியுள்ளேன்.” என்றார்.

இந்தியர்களுக்கு பாதிப்பு: இந்தியாவைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் ஹெச்1-பி (H-1B) விசா மூலம் அமெரிக்கா சென்று அங்கு பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றி வரும் நிலையில் ட்ரம்ப்பின் இந்த உத்தரவு அவர்களுக்கு மிகப் பெரிய கவலையை அளித்துள்ளது. வேலை விசாக்கள் அல்லது சுற்றுலா விசாக்கள் மூலம் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய குடிமக்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இனி இயல்பாக குடியுரிமை பெற மாட்டார்கள் என்பதால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர். அதோடு, தற்காலிக விசாக்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களை ஆண்டுதோறும் வேலைக்கு அமர்த்தும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x