Published : 30 Jan 2025 08:15 PM
Last Updated : 30 Jan 2025 08:15 PM

US Plane - Helicopter Crash: யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தகவல்

வாஷிங்டன் - போடோமாக் ஆற்றில் உடல்களைத் தேடும் பணி தீவிரம்.

வாஷிங்டன்: அமெரிக்காவில் பயணிகள் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதிக் கொண்ட விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய நேரப்படி, வியாழக்கிழமை இரவு வரை 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக களத்தில் உள்ள அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் 64 பேருடன் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம், அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டருடன் நடுவானில் மோதி, வாஷிங்டனின் போடோமேக் ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில், விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை, சுமார் 30 பேரின் உடல்கள், விமானம் விழுந்த போடோமேக் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 60 பயணிகள் மற்றும் 4 விமான பணியாளர்கள் பயணித்துள்ளனர். அதேபோல ராணுவ ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்கள் பயணித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்வதென்ன? - அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “விமானம் சரியான பாதையில் விமான நிலையத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. ஹெலிகாப்டர் குறிப்பிட்ட நேரத்துக்கு விமானத்தின் எதிரே நேராக சென்றுள்ளது. இரவு வானமும் தெளிவாக இருந்தது. விமானத்தின் விளக்குகள் பிரகாசமாக ஒளிர்ந்துக் கொண்டிருந்தன. அந்த ஹெலிகாப்டர் மேலேயோ, கீழேயோ அல்லது வேறு புறமாக திரும்பியோ ஏன் செல்லவில்லை? இது மிகவும் மோசமான நிலை, இதை தவிர்த்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. இது சரி இல்லை” என்று தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து மற்றொரு பதிவில், “இது எவ்வளவு பயங்கரமான இரவு... கடவுள் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக!” எனப் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து, அமெரிக்க தலைநகரில் உள்ள ரீகன் விமான நிலையத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அமெரிக்க செனட்டர் ரோஜர் மார்ஷல் கூறும்போது, “ஒரு விபத்தில் ஒருவர் உயிரிழந்தால் அது சோகம். ஆனால், பலர் இறக்கும்போது, ​​ அது அளவிட முடியாத மனவேதனை” என்றார். இது குறித்து தீவிர விசாரணை நடைபெற உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, இந்த விபத்து குறித்து மிகுந்த வருத்தம் தெரிவித்தார். மேலும், எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள, அமெரிக்காவின் அதிகாரிகள், “இந்த விவரிக்க முடியாத சோகத்தால் நாங்கள் மிகவும் மனமுடைந்து போயுள்ளோம், மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது” என்றார். இந்த விபத்தில் ரஷ்யர்கள் பலர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், ரஷ்யர்களின் குடும்பங்களுக்கு ரஷ்ய அதிபர் மாளிகை இரங்கல் தெரிவித்துள்ளது.

கடும் குளிரில் மீட்புப் பணி: மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களும், ஆற்று நீரில் இறங்கி தேடக்கூடிய காவல் துறையினரும் பல மணி நேரங்களாக மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு உறைய வைக்கும் அளவுக்கு குளிர் நிலவுகிறது. அதனால் மீட்பு பணி மேலும் சவாலாகியுள்ளது. தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் பிரிவு தலைவர் ஜான் டானலி, மீட்புப் பணிகள் மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. நிலைமை சற்று மோசமாக உள்ளது என்றார். தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்தது எப்படி? - அமெரிக்கன் ஏர்லென்ஸ் நிறுவனத்தில் குறைந்தளவிலான பயணிகள் ஏற்றிச் செல்ல கனடாவைச் சேர்ந்த பம்பார்டியர் நிறுவனத்தின் கனட்ஏர் ரீஜினல் ஜெட் 700 ரக விமானம் பயன்படுத்தப்படுகிறது. இதில் 78 பேர் பயணம் செய்யலாம். இந்த ரக விமானம் அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தின் விச்சிட்டா நகரில் இருந்து 60 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன், வாஷிங்டன் அருகே உள்ள ரொனால்ட் ரீகன் விமான நிலையத்துக்கு புதன்கிழமை மாலை புறப்பட்டது.

வாஷிங்டன் நகரை இரவு 9 மணியளவில் நெருங்கிய விமானம் தரையிறங்குவதற்காக 400 அடி உயரத்தில் தாழ்வாக மணிக்கு 140 மைல் வேகத்தில் பறந்து வந்தது. அந்த விமானம் 33-ம் எண் ஓடுபாதையில் தரையிறங்க விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது விர்ஜினியா பகுதியில் உள்ள ஃபோர்ட் பெல்வோயர் ராணுவ தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட யுஎச்-60 பிளாக்ஹாக் ரக ஹெலிகாப்டர் திடீரென குறுக்கிட்டது.

அப்போது விமானமும், ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி, வானில் மிகப் பெரிய தீப்பிளம்பு எழும்பியது. விமானத்தின் பாகங்கள் அருகில் உள்ள போடோமாக் ஆற்றில் விழுந்தன. ஹெலிகாப்டரின் பாகங்கள் ஆற்றுக்கு அருகே விழுந்தன. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் அமெரிக்க ராணுவத்தினர் 3 பேர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x