Published : 30 Jan 2025 12:30 PM
Last Updated : 30 Jan 2025 12:30 PM
வாஷிங்டன்: அமெரிக்காவில் பயணிகள் விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் மோதிக்கொண்ட விபத்தில் போடோமாக் ஆற்றில் இருந்து 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு அருகிலுள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்கும் போது அமெரிக்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானமும், பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் பயணிகள் விமானம் பல துண்டுகளாக போடோமாக் ஆற்றில் சிதறிக் கிடப்பதாக களத்தில் இருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன. ஹெலிகாப்டர் ஆற்றுக்கு அருகே விழுந்துள்ளது.
இந்த விபத்தை அடுத்து ராணுவம், காவல் துறை மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் இறங்கினர். ஹெலிகாப்டர் மற்றும் படகு மூலமாக அங்கு மீட்பு பணி நடந்து வருகிறது. இதில் இதுவரை 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் விமான புறப்பாடு மற்றும் தரையிறக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் அவசர நிலை குறித்த அறிவிப்பும் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 60 பயணிகள் மற்றும் 4 விமான பணியாளர்கள் பயணித்துள்ளனர். அதே போல ராணுவ ஹெலிகாப்டரில் மூன்று ராணுவ வீரர்கள் பயணித்துள்ளனர்.
என்ன நடந்தது? - அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் இருந்து 60 பயணிகளுடன் புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஈகிள் ஃப்ளைட் ‘5342’ எண் கொண்ட பயணிகள் விமானம், ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலைய ஓடுபாதையை இந்திய நேரப்படி இன்று (ஜன.30) காலை 7.30 மணி அளவில் நெருங்கும் போது பயிற்சியில் ஈடுபட்ட ராணுவத்தின் யுஹெச்-60 பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் மீது நடுவானில் மோதியது. தரையில் இருந்து சுமார் 400 அடி உயரத்தில் பயணிகள் விமானமும் ராணுவ ஹெலிகாப்டரும் மோதியது. அதில் தீ பிடித்து விமானம் வெடித்து போடோமாக் ஆற்றில் விழுந்தது. விமானம் சுமார் 225 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்த போது விபத்து ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...